ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார் மனைவி பிரியங்கா தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில்.. எனது கணவர் செந்தில்குமார் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நாங்கள் சின்ன அக்ரஹாரம் கிராமத்தில் மூன்று குடும்பத்தினர் பல தலைமுறை வசித்து வருகிறோம். எனது கணவரின் தம்பி மகேந்திரன் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகேந்திரன் மற்றும் ஊர் நாட்டாமை ராஜா என்பவருக்கும் ஊரில் மையப் பகுதியில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சனை நிலவியது. இந்த பிரச்சனை காரணமாக ஊர் நாட்டாமை எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார். 

இது தொடர்பாக எனது கணவர் ராணுவ வீரர் செந்தில் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாட்டாமை ராஜா எங்களை ஊரை விட்டு ஒதுக்கிய சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார். அதன் பிறகு நாங்கள் புகார் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டோம்.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்காக ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பல 500 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் எங்களது மூன்று குடும்பங்களிடம் பணம் வசூல் செய்யவில்லை,  நாங்கள் ஊர் நாட்டாமை ராஜாவிடம் கேட்டபோது உங்களை ஊரிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டதாக தெரிவித்தார். இதனால் எங்களால் ஊரில் உள்ள பொது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை, துக்க நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றால் ஊர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்று விடுகின்றனர், 

எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது சக மாணவர்கள் அவர்களிடம் பேசுவதில்லை, ஊரில் உள்ள சிறிய கடைகளில் குழந்தைகளுக்கும், எங்களுக்கும் உணவு பொருட்கள் வழங்குவதில்லை, இது தொடர்பாக ஊர் நாட்டாமை ராஜாவிடம் கேட்டால் என் மீது புகார் கொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்து அவமானப்படுத்தியதாகவும், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், 

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒருபோதும் உங்களை ஊரில் சேர்த்துக் கொள்ள மாட்டோம், என தகாத வார்த்தைகளால் மிரட்டுகிறார். எனவே ஓர் நாட்டாமையின் மீது நடவடிக்கை எடுத்து எங்களை எங்கள் கிராமத்தில் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *