HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 83

நமது வலிமையும் நமது எளிமையும்.

நமக்கு ஒரு வேலை நடக்க வேண்டுமென்றால், அதுவும் பிறரின் துணை மூலம் மட்டுமே அந்த வேலை நமக்கு நடக்க வேண்டுமென்றால், அவரைப் பற்றி முதலில் அறிந்து, எப்படி அவரை அணுகினால் வேலை முடியும் என்று ஒரு பெரிய ஒத்திகை பார்த்துச் செல்வது பலரின் வழக்கம். இந்த ஒத்திகை நமக்கு வேண்டிய தீர்வை மிக சுலபமாக பெற்றுத்தரும். அவரா கொஞ்சம் முன் கோபக்காரர், இவர் கொஞ்சம் தன்மையானவர். இவருகிட்ட கொஞ்சம் பாத்து பேசணும் புரியுதா, அசந்தா நமக்கே ஆப்பு வச்சிருவாரு. இவரு பிரச்னை இல்லாத ஆளுப்பா. இவரு எப்பவுமே கடுகடு, சிடுசிடுன்னு இருப்பார். இப்படி பல கோணங்களில் ஒருவரைப் பற்றிய பேச்சு இருக்கும். ஒருவரைப்பற்றி இன்னொருவர் வைத்திருக்கும் அளவீடு இதுதான். இந்த அளவீடு, ஒருசில நிகழ்வுகளை வைத்து பேசப்படுவதில்லை, மாறாக பொதுவான ஒரு பிம்பத்தை நம்மைப் பற்றி நாமே உண்டாக்கி வைத்திருப்பதைத்தான் பேசுகிறார்கள். இதில் எப்போதும் கராறாகவும், முறைப்பாகவும் இறக்கும் சிலரை, இவரு எப்பவுமே Strong Man என்று சொல்லக்கூடிய ஒரு நிலையையும் ஒருசிலர் ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் வலிமை அல்லது எளிமை எனும் வட்டத்திற்குள் வைத்து பார்க்கப்படும்.

வேலை செய்யுற இடத்துல பரிதாபம் பார்த்தா வேலைக்கு ஆகாது. நாம கடுகடுன்னு இருந்தாதான் நம்மள யாரும் தேவையில்லாம தொந்தரவு பண்ண மாட்டாக என்று சிலர் சொல்வதுண்டு. நாம எப்பவுமே ஒரு Distance வச்சுக்கிறது நல்லது, என்பது போன்ற உரையாடல்களை நான் அதிகம் கேட்டிருப்போம். இவையனைத்தும் தன்னை யாரென்று காண்பித்துக் கொள்வதற்கான ஒரு சிறு வரையறை அவ்வளவுதான்.  ஒரு மனிதனின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம்⸴ சாதனை மற்றும் சறுக்கல், இவன் சாதாரணமானவன் இவன் மிக வலிமை உள்ளவன் என்பதெல்லாம், அவரவர் மனதை அவர்கள் பயன்படுத்தும் முறையில் தான் இவையனைத்தும் நிகழ்கிறது. மனவலிமை உடையவர்களாக இருந்தால் நினைத்த எல்லாவற்றையும் எண்ணியபடியே அடைய முடியும். ஆதலால் மனித வாழ்க்கையில் உயர்வடைய மனவலிமை அவசியமானதாக அறியப்படுகிறது. இவற்றுள் நமது ஆற்றலின் வலிமை, பொருளாதார வலிமை, நட்பு வலிமை எனப் பலவகை வலிமைகள் வரிசையில் உள்ளது. சிந்தித்து உணர்ந்து செயலாற்றுதல் மூலமும், நாம் எடுத்துக்கொண்ட திட்டத்தின் தேவை புரிந்து நடந்துகொள்ளும் விதத்திலும்தான் நமது வலிமையின் தன்மை வலுவாகும். இல்லையெனில் அதுவே பிரச்சனைக்கு காரணமாகவும் மாறிவிடும்.

உடல் வலிமை, உள்ள வலிமை, அறிவு வலிமை மற்றும் புற வலிமை (இது சூழல் மற்றும் நட்பைக் குறிக்கும்) எனும் இவ்வலிமைகள் வாய்க்கப் பெற்றால், நமக்கான முழுமையான வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று அர்த்தம். உடல் வலிமை இருந்து உள்ள வலிமை குன்றிவிட்டால் பயனேதும் இல்லை. மன/உள்ள வலிமை சில நேரங்களில் சோர்ந்திருக்கும் உடலைக்கூட வலுவுள்ளதாக மாற்றிவிடும். உண்மையும், நம்பிக்கையும், நிறைவான அன்பும் நிறைந்திருக்கிற அகத்திற்கு வலிமையான வலிமை உண்டு. வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஏற்படும் எல்லாத் துன்பங்களையும் எளிதில் கடந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்று சுருங்கப் பெருள்கொள்ள வேண்டாம், மாறாக துன்பங்களை சீர்தூக்கிப் பார்த்து தீர்வு காணும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதுதான் அதன் முழுப்பொருள். வலிமையானவன் தனக்குத் தேவையான ஆயுதத்தை எதிரிகளிடமிருந்து பெற்று அவர்களை தோற்கடிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பான் எனும் சொல்லாடலை கேட்டிருப்போம். ஆம் உண்மைதான், அவன் எளிதில் துவண்டு போவதில்லை. எதிர்வரும் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பான். நம்மிடம் இருக்கும் வலிமையோடு எளிமை கொஞ்சம் சேரும்போது, பொன்னோடு சேரும் செம்பால் அழகிய பொன் நகைகள் உருவாவதுபோல. எளிமை கலந்த வலிமை பிறர் மனதில் நமக்கான புன்னகையை ஏற்படுத்தும்.

கதிரவனைச் சில நேரம் கார்முகில் மறைப்பது போல, நம் வலிமைக்கு ஏற்படும் சிக்கலை எளிமையால் வெல்லலாம். ஏனென்றால், கடினமான சூழ்நிலையில் அமைதியாக நடந்துகொள்வதற்கு மனவலிமை தேவை. மனிதர்களைக் கையாளும் மனிதவளத்துறையில் வலிமை மட்டும் இருந்து என்ன பயன். வலிமை கலந்த எளிமைதான் நம்மை அதிக உயரத்திற்கு இட்டுச்செல்லும். அரசுத் துறையில் பலரை நான் இதுபோன்ற வலிமையும், எளிமையும் கலந்த குணங்களில் கண்டுள்ளேன். மக்களோடு நெருங்கிப் பயணிக்கும் இவர்கள் இதுபோன்ற குணங்களால் எப்போதும் மேன்மக்களாக அறியப்படுவர். எல்லா வலிமைகளை விட மனவலிமைக்கு கொஞ்சம் வலிமை அதிகம் ஏனென்றால் மனவலிமை குன்றும்போது மனநோய்க்கு ஆளாகிறோம், மனம்போன போக்கில் வாழும்போது வாழ்க்கையையே இழக்கிறோம். ஆதலால் நமது வலிமையம், நமது எளிமையும் என்றென்றும் நமதாகட்டும்.

பணம் இல்லையெனும் மனவருத்தத்தில் சிலரும், இருக்கும் பணத்தை எப்படிப் பெருக்குவது எனும் அழுத்தத்தில் சிலரும், அதிகப்படியான பணத்தை எப்படிக் காப்பது எனும் பயத்தில் சிலரும் இருப்பதை நாம் கண்டிருப்போம், ஏதோ ஒரு வலிமையில் இவற்றைச் சேர்ந்திருந்தாலும் அங்கு கொஞ்சம் எளிமை இருந்தால் இந்த அழுத்தம் நிச்சயம் குறையும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு எனும் நம் கிராமத்து பழமொழி வழக்கை நாம் நினைவில் வைத்தால் இந்த வலிமை மற்றும் எளிமை எனும் ஒட்டுமொத்த சாராம்சத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆதலால் வலிமை நம்முள் வாழட்டும் எளிமை நம்மை ஆளட்டும்.

கெடுபிடியாக இருப்பது வலிமையும் அல்ல! எடுபிடியாக இருப்பது எளிமையும் அல்ல!

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.  

 *கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Daniel Rajanyagam says:

    Super 👌