HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 86
காதலும் கடமையும் கசிந்துருக
கடமை என்னை அழைக்கிறது, காதல் என்னை அலைக்கழிக்கிறது, நான் என்னதான் செய்ய, இரண்டையும் ஒருசேர செய்ய வாய்ப்பே இல்லையா? எனும் அங்கலாய்ப்பு நம்மில் பலருக்கு இருக்கும். அவன் மட்டும் எப்படி எந்த வேலை கொடுத்தாலும், எல்லாவற்றையும் புன்சிரிப்போடு செய்கிறான் எனும் ஆச்சர்யமும் ஏக்கமும் இருக்கும். அவர்களால் முடியும் என்கிற ஒன்று ஏன் நம்மால் முடியாது என எண்ணும் போது, வலிகள் மறைந்து வழிகள் பிறக்கும். வேலை வேலை என்று வேலையை மட்டுமே முழு மூச்சாக நினைத்து மூச்சை விட்டவர்கள் உண்டு. வேலையை மறந்து வேண்டாதவற்றில் கவனம் செலுத்தி வேலையை இழந்தவர்களும் உண்டு. நாம் செய்யும் வேலை நம் வாழ்வின் ஒரு பகுதி தான். வேலை மட்டுமே நமது மகிழ்ச்சி மற்றும் நிம்மதிக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. வேலையைத் தாண்டி நமது தனிப்பட்ட வாழ்வில் நாம் கவனிக்க வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் உண்டு. நமது தனிப்பட்ட உயர்வு மற்றும் சமூக இணைப்பு ஆகியவற்றை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். பணம் நிறைய வருகிறது என்பதற்காக மட்டும் ஒரு வேலையில் இருப்பது என்பது நமக்கு நாமே செய்யும் மறைமுகத் துரோகம்.
பலருக்கு ஆரம்பத்தில் தான் பார்க்கும் வேலை பிடிப்பதில்லை. போகப் போக பார்க்கும் வேலை பிடிக்க ஆரம்பிக்கும். முதலில் ஒரு கடமையாக நினைத்துப் பார்த்ததால் அதில் ஈர்ப்பில்லாமல் இருக்கும். பிறகு அதன் மீது நாம் வைக்கும் காதல் நம்மை வேலையின் மீது ஈடுபாடு உள்ளவராக மாற்றிவிடும். காதலும் கடமையும் கசிந்துருகும் போது நாம் பார்க்கும் வேலையில் என்ன இடர்பாடுகள் வந்தாலும் எப்பாடு பட்டாவது அதை சரிசெய்யக்கூடிய மனப் பக்குவம் நமக்கு வாய்க்கும். கடமை என்பது ஒரு குறிப்பிட்ட வழியில் நம்மை இயக்கும் பொறுப்பு மற்றும் சட்டபூர்வமான செயல்பாடாகும். பொறுப்பு கலந்த அர்ப்பணிப்பு ஒருவரின் கடமைகளை நிறைவேற்ற கூடுதல் பலன் தருகிறது. நான் இன்று இங்கு வரவேண்டியது என் கடமை என்பதால் இங்கு வந்தேன் என்று சொல்லும் போது. அது ஒரு கடமை, அதை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும், எனும் மனநிலைக்கு வருகிறோம். நிறைவேற்றியே ஆகவேண்டிய ஒரு செயல்தான் கடமை. அதில் விருப்பு இருக்குதோ இல்லையோ பொறுப்பு நிச்சயம் இருக்கும். நான் அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளது அதை முடித்து விட்டால் நிம்மதியாக இருக்கும் என்று பொறுப்புள்ள சில மனிதர்கள் சொல்வதை கேட்டிருப்போம். இந்தக் கடமையை முடுச்சிட்டுத்தான் நான் என் கண்ண மூடுவேன் என சில பெரிய மனிதர்கள்/ வயதான மனிதர்கள் என் ஊரில் சொல்ல கேட்டிருக்கிறேன். அப்படியானால் கடமை என்பது முடிக்க வேண்டிய செயல். அந்தச் செயலில் நாம் காட்டும் முழு ஈடுபாடுதான் காதல் (ஈர்ப்பு). ஆதலால் காதலும் கடமையும் கசிந்துருகும் போது நாம் எல்லையற்ற இன்பம் பெறுவோம், தொல்லையற்ற உயரம் தொடுவோம்.
கடமையைப் பற்றி பேசிவிட்டோம், அடுத்து காதலைப் பற்றி பேசியே ஆகவேண்டும். காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் ஏராளம். எப்படி நம் ஆசைகள், ஏமாற்றங்கள், ஆழ்ந்த உணர்வுகள் ஆகியவற்றை மற்றவர்களிடம் நாம் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியாதோ அதுபோலத்தான் காதலும். சூரியகாந்தி பூவானது கடைசி நேரத்தில் சூரியனை நாடுவதில்லை, மாறாக தொடர்ந்து தன் ஒவ்வொரு அசைவிலும் சூரியனை மையப்படுத்தியே இருக்கும், ஏனெனில் அது ஒரு தொடர் நிகழ்வு., அதுபோலத்தான் தனக்குப் பிடித்த ஒன்றின் மீது நாம் வைக்கும் ஈர்ப்பு காதலாக மாறுகிறது, அக்காதல் கடமையோடு கலக்கும் போது, நாம் செய்ய நினைக்கும் அத்தனை செயல்களையும் ஒரு கலக்கு கலக்கு என கலக்கிவிடுவோம். இதை ஒரு தன் உள ஆய்வு (Introspection) மூலம் தான் மெருகேற்ற முடியும். இதை சிறப்புறச் செய்யும்போது நம் ஒவ்வொரு செயலும் சிறக்கும்.
நம் சமூகத்தில் குடும்பத்துக்காக நிறைய பேருடைய கனவுகள் பலி கொடுப்பது வழக்கமாகிவிட்டது, குறிப்பாக பெண்கள், தங்கள் ஒட்டுமொத்தக் கனவையும் கலைக்க வேண்டிய சூழல் இன்றும் உள்ளது சற்று வருத்தம் தரக்கூடிய ஒன்றாகும். அவர்களுக்கு கடமை மட்டும்தான் கண் முன் நிற்கிறது. தனக்கான ஒரு மகிழ்வு தரும் செயலை தன் தனிப்பட்ட உயர்வுக்காக செய்யும் நிலை இப்போது கொஞ்சம் மாறிவிட்டாலும், இன்னும் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையவேண்டும் என்பது, நல்ல சமூகப் பார்வை கொண்டுள்ளவர்களின் கருத்து. எல்லாவித வாய்ப்புகள் இருந்தும் மேல வர இயலாமல் இருப்பது அல்லது விருப்பமில்லாமல் இருப்பது என்பது, அங்கு கடமை இருக்கும் காதல் இல்லை அவ்வளவுதான்.
இன்னும் சொல்லப்போனால், எதிர்காலத்தை நினைத்து வருந்துவதைவிட நிகழ்காலத்தைக் கொண்டாடுவது வழியாக சிக்கலான சமயத்தில் சிறப்பான முடிவெடுக்க முடியும். இங்கே கொஞ்சம் யோசிக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி எவ்வித பிடிப்பும் இல்லாமல் இருந்தால் எப்படி? எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவே கூடாது என்பதல்ல, நிகழ்காலத்தை சிறப்பாக வாழ்வதன் மூலம் எதிர்காலத்தை பொருளுள்ளதாக மாற்ற முடியும். அதற்குக் கடமை உணர்வும், காதல் உணர்வும் அவசியம். அளவு கடந்த காமம் தான் காதல் என்றல்ல, அளவில்லா கடமை உணர்வும், அதில் நாம் காட்டும் ஈர்ப்பும் நம்மை என்றென்றும் மேல்நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த உயர்வைக் கண்ட பலரை நான் கண்டுள்ளேன். நீங்களும் அதில் ஒருவராக உயர கடமையும் காதலும் கரைபுரண்டு ஓடட்டும். காதல் கைகூடிய பின் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம், கடமையும் காதலும் கைகோர்த்த பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நடக்க வேண்டியது நிச்சயம் நம் வாழ்வில் நடக்க காதலும் கடமையும் எப்போதும் நம் வாழ்வில் கசிந்துருகட்டும்.
முடிவெடுப்பது ஒரு கலை, கடமை நம்மை முடிவெடுக்க வைக்கும், காதல்தான் (ஈர்ப்பு) அதை முடித்து வைக்கும்.
தொடர்ந்து பயணிப்போம்…
முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.
*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com
Arumai sir