HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 85

பரவசம் தரும் பரிந்துரை

இந்த வேலை உனக்கு உடனே முடியுனுமா? அப்டினா அவர் ஒரு கடிதம் கொடுத்தா ரொம்ப சுலபமா முடிஞ்சிரும். இங்க உனக்கு வேலை ஆகணுமா? அப்டினா இவரப் போயி பாரு. இப்படிப் பல இடங்களில் பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். அவருகிட்ட ஒரு கடிதம் மட்டும் வாங்கிட்டு வா மத்தத நான் பாத்துக்கிறேன். அவரு ஒரு வார்த்த சொன்னாவே போதும் எல்லாம் சரியாயிடும். அப்படி என்ன அந்தக் கடிதத்தில்/வார்த்தையில் இருந்துவிடப் போகிறது. ரகசியம் ஏதும் இருந்துவிடப் போவதில்லை, மாறாக வந்திருக்கும் நபர் எனக்குத் தெரிந்தவர், என் நம்பிக்கைக்கு உரியவர், இந்த நம்பிக்கை உன்னிடமும் தொடரும் ஆதலால் இவரை நீ தாராளமாக நம்பலாம், என்பதாக இருக்கும். மேலும் வேலைக்கோ அல்லது ஒரு கல்லூரியில் இடம் பெறுவதற்கோ இன்னொருவர் தரும் கடிதம், கொடுப்பவரின் அதிகாரத்தால் அது இன்னும் கூடுதல் பலம் பெறும், மற்றும் பலன் பெரும். பரிந்துரைக் கடிதம் (Recommendation Letter) என்பது, அந்தக் கடிதத்தை தருபவரின் ஆளுமையையும், கடிதத்தை வாங்கி வருபவரின் திறமையையும் ஒருசேர தாங்கி வருவதாகும்.

அவரெல்லாம் பெரிய இடத்து Recommendationல வந்தவரு, அவருகிட்ட நாம ஏதும் வச்சுக்கிற வேணாம். இவரு முழுத்திறமையால வந்தவரு, ரொம்ப நல்லவரு என்று நாம் வேலை பார்க்கும் இடத்தில் சிலர் இப்படிப் பேசுவதுண்டு. இதில் இது நல்லது அது கெட்டது என்று சொல்வதே தவறு. யாரொருவர் எப்படிப்பட்ட பரிந்துரையிலோ அல்லது வேறு ஏதாவது வழியாகவோ வந்திருந்தாலும், அவர் எப்படிப்பட்டவர் என்னமாதிரியான திறமை அவருக்குள் உள்ளது என்பது ஒரு மாதத்திலேயே தெரிந்து விடும். அவரது செயல்பாடு நன்றாக இருந்தால் பரிந்துரை செய்தவருக்கு மதிப்புக் கூடும், இல்லையென்றால் அதற்குப் பின், அவரை அறிமுகம்/பரிந்துரை செய்தவரின் பெயருக்கு ஒரு நல்ல மதிப்பு இல்லாமல் போய் விடும். எதிர்வரும் காலத்தில் வேறு யாரையும் அவர் பரிந்துரை செய்தாலும் எடுபடாது. இதற்குத்தான் நான் யாரையுமே எங்கேயும் அறிமுகமோ, பரிந்துரையோ செய்வதே இல்லை எனத் தப்பிக்க வேண்டாம். உங்களிடம் பரிந்துரை கேட்டு வருபவர், இவரிடம் போனால் நமக்கு ஒரு வழி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு வரும்போது, அந்த நம்பிக்கைக்கு விளக்கேற்றுவது நம் கடமை. அது பல வெளிச்சங்களை அவர்களுக்குக் காண்பிக்கலாம். ஒருவரால் உயர்வு பெற்றவர் நிச்சயமாக அவரை தன் வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார். அப்படி மறந்தாலும் இழப்பு நமக்கில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம். ஏனென்றால் நாம் வாழ்க்கையை ஒரே நேரத்தில் வாழவும் மற்றும் புரிந்துகொள்ளவும் முடியாது. அதை அதன்போக்கில் விட்டுவிட்டு நாம் வாழ முற்படும் போது அது நமக்கு பல நல்ல புரிதலைத் தரும்.

ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஒரு தருணத்தில் சிலரின் பரிந்துரை அல்லது அறிமுகம் இருந்தால்தான் நாம் அந்த இடத்திற்கு உள்ளேயே செல்ல முடியும் எனும் போது, அதைப்பற்றிய சரியான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும். உனக்கு என்னதான் அறிவு திறமை இருந்தாலும், இந்த வேலைக்கு இவரைப் பிடித்தால்தான் நீ எளிதாக உள்ளே போகலாம் இல்லையென்றால் காலம் முழுக்க இப்படியே இருக்க வேண்டிய நிலைதான். அப்படியா? யார் அவர்? எனும் ஆவல் கொண்டு, நம் திறமையைத் தாண்டி அவரை பார்ப்பதற்கு நம் மனம் தேடும். பரிந்துரைக்கும் நிலையில் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் இந்த சமூகத்திலோ அல்லது அவர் சார்ந்த துறையிலோ ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் உயரத்தை அடைந்தவர் என்றுதான் பொருள். ஆதலால் அவர்கள் தரும் பரிந்துரையும் ஏற்புடையதே. அதை விடுத்து ஒருசில அற்ப நோக்கத்திற்காக பரிந்துரை எனும் பெயரில் சிலர் செய்யும் செயல்கள் இந்த எல்லைக்குள் வரவே வராது. அதைப்பற்றி பேசுவதையும் தவிர்ப்போம். வலிய போய் அதை வம்புக்கிழுக்க வேண்டிய தேவையும் இல்லை.

யாரோ ஒருவரின் பரிந்துரையால் யாருக்கோ வரவேண்டிய வாய்ப்பு பறிபோனது எனும் வாதம் வந்தால், அது முழுக்க முழுக்க அரசியல். அது இருக்கத்தான் செய்யும். அது இல்லாத இடமில்லை. அதற்குள் நாம் சிக்குண்டு சிதறிவிடாமல், எகிறி அடிக்கும் ஆற்றலை ஏற்படுத்திக்கொள்வது சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து அதை குறைசொல்லிக் கொண்டே இருந்தால், அடுத்த வர வேண்டிய வாய்ப்பும் நழுவி விட வாய்ப்புண்டு. ஆதலால் எதற்கும் ஓர் எல்லையுண்டு. ஒரு கட்டத்தில் அதுவே அதன் எல்லை தொட்டதும் தொல்லை என அவரவர் உணரும் நிலை வரும். பெரிய பெரிய அறிமுகம் உள்ள சிலருக்குக் கூட ஏதோ ஓர் இடத்தில் பரிந்துரை என்பது அவசியமாகிறது எனும் போது, பொது மனிதன் மட்டும் என்ன விதிவிலக்கா? எவ்வளவோ உச்ச நிலையில் இருக்கும் சில நடிகர்கள் தனது படத்திற்கு தனக்கு மேலே அல்லது தனக்கு நிகராக உள்ளவரை வைத்து பரிந்துரை எனும் பெயரில் விளம்பரம் செய்துதானே அவர்கள் படத்தை வெளியிட்டு வெற்றிபெற வைக்கமுடிகிறது. ஆதலால், பரிந்துரையை நாம் சரியான கருத்துப் புரிதலில் உணர்ந்துகொள்ள வேண்டுமே தவிர, அதைவிடுத்து இதெல்லாம் தேவையே இல்லாத ஒன்று என்று பொத்தாம் பொதுவாக ஒதுக்குவது நன்றாக இருக்காது.

அவர்களுக்குத் தெரிந்தவர்களை, வேண்டப்பட்டவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள் எனும் வெளிப்படையான குற்றச்சாட்டு மனிதவளத்துறை மீது உண்டு. இது போன்ற குற்றசாட்டு மனிதவளத்துறையில் மட்டுமல்ல எல்லா இடத்திலும்/துறையிலும் உண்டு. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னோடு படித்த ஒரு மாணவர் ஒரு சிறு தவறு செய்துவிட்டார். அதற்கு எனது துறைத்தலைவர் (HOD) அம்மாணவரை பரிந்துரை செய்தவருக்கு தகவல் கொடுத்து விட்டார். அவரு பேர காப்பாத்தணும்னு சொல்லி அனுப்பினார் சார், இப்ப அவரு கேட்டா என்ன பதில் சொல்றதுனு தெரியல என்று அழாத குறையாக புலம்ப ஆரம்பித்தான் அந்த மாணவன். இதுதான் பரிந்துரையின் இன்னொரு வலிமை என்று சொல்லலாம். இதை இந்தக் கோணத்தில் பார்க்கும் போது சரிதான் எனத் தோன்றும். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் யாருடைய வாய்ப்பையும் தட்டிவிட முடியும் ஆனால் தடுக்க ஒருபோதும் முடியாது. ஆதலால் அவர் என்னை பரிந்துரைத்து விட்டார் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என நாம் எதுவும் செய்யாமல் ஒதுங்கிப் போக முடியாது. நம் திறமையை எடுத்தியம்ப அவர் ஒரு வழி காண்பித்து உள்ளார் அவ்வளவுதான். நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில், அதன் நிர்வாக இயக்குநர் ஒரு குறிப்பிட்ட துறைக்கு ஒருவரை பரிந்துரை செய்தார். பரிந்துரைக்கப்பட்ட நபர் இன்னொருவர் குழுவில் பணியாற்றும் பொறுப்பு. பரிந்துரைத்த அதே நேரத்தில் இன்னொரு கருத்தையும் முன்வைத்தார். நான் சொன்ன நபர் என்பதற்காக உங்களது நடைமுறையை மாற்றவேண்டாம். அவர் இதற்குத் தகுதியானவரா என்பதை நீங்கள் உங்கள் முறைப்படி பார்த்து செய்யுங்கள். எந்தவிதமான சலுகையும் இதில் காண்பிக்க வேண்டாம். நன் பரிந்துரை செய்தேன் எனும் ஒரே காரணத்திற்காக எடுத்து பிறகு அவர் அந்த வேலைக்கு சரியானவர் அல்ல எனத் தெரியவந்தால், அது எனக்கும் நல்லதல்ல நிறுவனத்திற்கும் நல்லதல்ல என்பதை தெளிவுபடக் கூறினார். இந்தத் தெளிவு உயர் நிலையில் இருப்பவர்களுக்கு இருந்து விட்டால், பல சிக்கல்களைத் தீர்க்கும். இல்லையெனில் சிக்கல்களை வளர்க்கும். வளர்ப்பதா? தீர்ப்பதா? அவரவர் பொறுப்பு.

சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இன்னொருவரை பரிந்துரைக்கும் போது அவர் அவரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைக் குறிக்கிறது. மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வழிவகை செய்கிறது. நேர்மறையான பரிந்துரைகள் புதிய புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. நிறைய வாய்ப்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது. நாம் ஒருவரை பரிந்துரைக்கும் போது அவரது செயல்பாடு மேன்மைமிக்கதாக இருந்தால் நமது நற்பெயரும், நம்பகத்தன்மையும் அதிகரிக்க அதிக வாய்ப்புண்டு. இன்னும் சொல்லப்போனால் நாம் ஒரு செயல் சார்ந்து முடிவெடுப்பதை எளிதாக்கி சமூக உறவுகளை வளர்த்தெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் காரணியாக இந்தப் பரிந்துரை அமைந்து நம்மை பரவசமூட்டுகிறது.

பரிந்துரை என்பது இன்னொருவரை நம்பி வீண்போவதும் அல்ல, விலை போவதும் அல்ல. ஒருசில பரிந்துரையில் அதிகாரம் நிறைந்து காணப்படும், அது சில நேரங்களில் அந்தக் கடிதத்தை தாங்கி வருபவருக்கு சிக்கலாகக் கூட மாறும். அதிகாரம் நிறைந்த பரிந்துரையில் ஆபத்து கொஞ்சம் கலந்துதான் இருக்கும்.  பரிந்துரை கொடுப்பதற்கு முன், வந்திருப்பவரைப் பற்றி அறிந்து பிறரிடம் உரை அதுவரை எதுவும் உரைக்காதே என்று எனது தமிழ் ஆசிரியர் கூறியதை தற்போது நினைவு கூறுகிறேன். வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து உரைப்பவர்கள் பற்றி நாம் இங்கு பேசவில்லை, அதற்கு முற்றிலும் மாறாக, இவனிடம் ஒரு திறமை மற்றும் துடிப்பு உள்ளது ஒரு வாய்ப்புக் கொடுத்தால் இவனது வாழ்வு சிறப்புற அமையும் எனும் பரந்துபட்ட நோக்கில் செய்யப்படும் எல்லாப் பரிந்துரையும் ஏற்புடையதே. அப்படிப்பட்ட பரிந்துரையை நாமும் பிறருக்கு புரிந்து பரிந்து உரைத்தால் நல்லதுதானே, அதை நாமும் செய்ய முற்படுவோம். இவரால் முடியும், இவரால் நம் வாழ்வு ஒளி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி வருபவருக்கு இல்லையென மறுக்கும்போது, அது ஒரு தீராத மன வேதனையை ஏற்படுத்தும். மன ஆறுதலுக்காக ஏதோ ஒன்றை நாம் கடமைக்கு செய்யாமல், வாழ்வு மாறுதலுக்கான ஒரு கருவியாக இது அமையட்டும் எனச்செய்யும் போது இருவருக்குமான மகிழ்ச்சியாக மாறி நமக்கு பரவசம் தருகிறது. பரவசம் பரவட்டும்.

பரிந்துரை நம்மை அறிமுகம் மட்டுமே செய்யும், திறமைதான் நம்மை அடையாளப்படுத்தும். – கவிஞர் வைரமுத்து.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.  

 *கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. Enoch Thomas P says:

    Nice

  2. கோவி. சேகர் says:

    உங்களிடம் பரிந்துரை கேட்டு வருபவர், இவரிடம் போனால் நமக்கு ஒரு வழி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு வரும்போது, அந்த நம்பிக்கைக்கு விளக்கேற்றுவது நம் கடமை. அது பல வெளிச்சங்களை அவர்களுக்குக் காண்பிக்கலாம்.