HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 84
பரிதாப பலியாடுகள்
வேலை என்பது நாம் வாழ்வதற்கான மற்றும் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு காரணி, அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. வேலை இல்லையென்றால் சிலருக்கு பித்துப்பிடித்தது போல ஆகிவிடும், சிலருக்கு வேலை என்றாலே ஒவ்வாது. நான் என் குடும்பத்தை சிறப்பாக வாழ வைப்பேன் என்பதைத் தாண்டி சொகுசா வாழ வைப்பேன் என நினைக்கும் போது, நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய அழுத்தங்கள் நம்மை அலுவலகங்களில் அடிமையாக வைத்திருக்கிறது. அடடா அப்டினா, நாம வேலைக்கு போகாம வீட்டுலேயே விட்டில் பூச்சியா இருக்க சொல்கிறார் போல என நினைத்து விட வேண்டாம். Whether we are intended on running the family or developing the family என்று ஆங்கிலத்தில் அடிக்கடி அங்குமிங்கும் கேட்டிருப்போம். குடும்பத்தை நடத்த விரும்புகிறோமா அல்லது வளர்க்க/உயர்த்த விருப்புகிறோமா என அறியும் போது, வேலையின் மீது நாம் கொண்டிருக்கும் அழுத்தம் மாறி பிடித்தம் ஏற்படும். அந்தப் பிடித்தம் ஏற்படும்போது நாம் எதற்கும் அடிமையாகாமல், முழு விடுதலை உணர்வை உணர்வோம், இந்த விடுதலை உணர்வு பிறரின் அற்பத் தேவைகளுக்காக நம்மை பலியாகாமல் தடுக்கும்.
மனிதன் ஒரு சமூக விலங்கு இதை நமக்கு விளங்கும் படி பலர் நல்ல நமக்கு படிப்பினைகளைத் தந்துள்ளனர். நம்மோடு பயணிக்கும் சக மனிதர்கள்தான் நம் பாரங்களை இறக்கி வைக்க உதவும் சரியான சுமைதாங்கிகள். அதை நாம் உணர்ந்து அவரும் விரும்பி அந்தச் சுமையைத் தாங்கும் போது சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் இருவரில் ஒருவருக்கு விருப்பம் இன்றி வற்புறுத்தலின் அடிப்படையில் சுமக்கும் எதுவும் பாரமாகத் தெரியும். அது நம்மை வெகு தூரமாக பிரித்து வைத்துவிடும். இந்த இருவரில் யாரோ ஒருவர் வலிமை மிக்கவராக அல்லது அதிகாரம் உள்ளவராக இருந்துவிட்டால் அங்கு சிக்கல் தானாக முளைத்து நான் யாரென்று காட்டுகிறேன் பார் எனும் தொனியில் ஆதிக்கம் மேலிடும். அது யாரையோ ஒருவரை பலிகடா (Scapegoat) ஆக்கிவிடும்.
இது அறிவுரையா? அறவுரையா? நல்லுரையா? என்று அலசுவதற்கு முன், நாம் எப்படிப்பட்ட வேலை சூழலில் உள்ளோம் என்பதை சற்று ஆராய வேண்டும். குடும்பம் எனும் அழகான கவிதையை, வேலையின் பொருட்டு வீணாக்கியோரும் உண்டு, குடும்ப சிக்கலால் வேலையிலேயே சிக்குண்டு இருப்போரும் உண்டு. பேசுவதற்கு மட்டுமே செல்போன் எனும் நிலைமாறி பேசிக்கொண்டே இருப்பதற்கான நிலையாக மாறிவிட்டது எப்படியோ அப்படித்தான் இதுவும் என்பதை உய்த்துணரும் போது இதற்கான விடை நமக்குக் கிடைக்கும். ஏதோ ஒன்றில் எவ்விதக் காரணமும் இன்றி நாம் சிக்குண்டு இருந்தால், என்றோ ஒருநாள் நாம் பலியாடாக மாறுவது உறுதி.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், எப்போதும் வேலை வேலை என்று, அதில் மட்டுமே முழுக் கவனம் வைத்திருப்பார். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றுகிறது, பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது, புது வேலை எதுவும் எனக்கு மேல் உள்ளவர் தந்துவிடுவாரோ எனும் பதட்டத்திலேயே இருப்பார். ஒரு வேலையை முடிக்கும் முன்னரே இன்னொரு வேலையைத் தரும்போது அதற்கு சரியென்று சொன்னாலும் வம்பு, முடியாதென்றாலும் வம்பு. என்ன செய்வதென்றே புரியவில்லை, ஒரே குழப்பமா இருக்கு என்று புலம்பிக்கொண்டே இருப்பார். தினம் தினம் கொன்றுகொண்டிருக்கும் இந்த எண்ணங்களில் இருந்து விடுதலை பெற எவ்வித முயற்சியும் எடுக்கமாட்டார், பிறர் எடுத்துச் சொன்னாலும் ஏற்க மாட்டார். ஆதலால் அவர் ஏதாவது சொன்னால், நம்மிடம் சொல்கிறார் காது கொடுத்துக் கேட்போம், அவர் ஆறுதல் அடையட்டும் எனும் மன நிலைக்கு அவரின் நண்பர்கள் மட்டுமல்ல குடும்பத்தினரும் முடிவெடுத்து விட்டனர். இதை ஆங்கிலத்தில் Used to என்பார்கள், அதாவது அவருக்கு அது பழக்கமாகிவிட்டது, மீண்டு வருவது சற்று இயலாத காரியம் தான்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், பணியிடத்திலும் மற்றும் இன்ன பிற இடங்களிலும் அதிகார மையத்தோடு நெருங்கி இருப்பதை பெருமையாக பலர் நினைப்பதுண்டு, அந்த அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக எதை வேண்டுமானும் செய்யும் மனநிலையில் சிலர் மாறிவிடுவர், ஏனென்றால் அதிகார நிழல் நம்மை மயக்கக்கூடியது, அம்மயக்கத்தில் சிலர் மயங்கி விடுவதும் உண்டு, மயங்கி விழுவதும் உண்டு. அதிகார மையத்தோடு நாம் நெருங்குவது என்பது குளிர் பனிக்கட்டி போல இருக்கும், அந்தக் குளிர் பனிக்கட்டி கூர்மையாகும் தன்மை வரும், அது தீயீட்டியாகக் கூட சில சமயங்களில் குத்தும். எப்படி இருப்பினும் அதிகார மற்றும் ஆதிக்க நிழலில் இருப்பதை சிலர் தங்களின் சாதனையாகக் கூட நினைப்பதுண்டு. தக்க சமயம் பார்த்து நம்மை அது காவு வாங்கும் சூழல் ஏற்படும், அப்போது வாழும்போது நாம் அனுபவித்த அத்தனை மரியாதைகளும் அவமரியாதையாக மாறும் நிலை ஏற்பட்டு விடும். ஆதலால் நம் திருவள்ளுவர் கூறுவது போல அகலாது அணுகாது தீக்காய்வார் போல இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகார மையத்தோடு நாம் கொள்ளும் நட்பு மற்றும் நெருக்கம் புகழ் வெளிச்சத்தைத் எளிதாகத் தரும். அந்தப் புகழ் தக்க சமயம் பார்த்து இகலையும் தரும். இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் நாம் ஒருபோதும் பரிதாப பலியாடாக ஆகமாட்டோம். அதற்காக அதிகார மையப் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை எனும் முடிவெடுக்க வேண்டாம், அதை சரிவர கையாளத் தெரிந்தால் கவலை இல்லை அவ்வளவுதான்.
நாம் எதை விரும்புகிறோம்? எத்துறையில் வல்லமை பெற விரும்புகிறோம்? அதன்மூலம் நாம் அமைக்க விரும்பும் வாழ்க்கைக்கான பயணம் என்ன? அந்தப் பயணத்தை இனிதாக்க எவ்வழியில் பணம் ஈட்டப்போகிறோம்? நாம் விரும்பி பணியாற்றும் இச்செயல் இந்த சமூகத்திற்கு தேவையானதா? போன்ற கேள்விகளுக்கு நாம் தெளிவான விடைகாண முற்பட்டால் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும். இது இன்றைய சூழலுக்கு எதார்த்தமில்லையே எனக் கேள்வி கேட்கலாம், இதன் அடிப்படையில் எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் என்பதை எண்ணும்போது நம்முள் ஓர் ஒளி பிறக்கும், அவ்வொளி இருட்டைக் கிழித்து வெளிச்சத்தைப் பரப்பும். ஒளி பரவட்டும். மேலும், நாம் பழிவாங்கும் ஆடுகளும் அல்ல, பரிதாப ஆடுகளும் அல்ல, பலியாகும் ஆடுகளும் அல்ல, எதையும் ஓங்கிச் சொல்லவும், ஒதுங்கிச் செல்லவும் முடியாமல் நிற்கும் ஆடுகளும் அல்ல, மொத்தத்தில் ஒலி எழுப்பும் ஆடுகள் நாம் எனும் மேன்மைமிகு எண்ண வட்டத்திற்கு உள்ளே வருவோம். எல்லையில்லா இன்பம் காண்போம்.
பழிதீர்த்தல் ஒருபோதும் பயன்தராது, வீண் பலியாதல் எப்போதும் பயன்பெறாது.
தொடர்ந்து பயணிப்போம்…
முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.
*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com
நான் என் குடும்பத்தை சிறப்பாக வாழ வைப்பேன் என்பதைத் தாண்டி சொகுசா வாழ வைப்பேன் என நினைக்கும் போது, நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய அழுத்தங்கள் நம்மை அலுவலகங்களில் அடிமையாக வைத்திருக்கிறது.
மிகவும் சிறப்பான வாழ்வியல் தத்துவம். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.