டிஎஸ்பியை கண்டித்து காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு .

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, இவரது மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேல் ஆகியோர், சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்-செல்வி ஆகிய தம்பதியிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 2.5 லட்சம் ரூபாய் பணம், 4 பவுன் நகை கடனாக வாங்கியுள்ளனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த செந்தில், செல்வி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் கடன் பெற்றுக் கொண்ட வளர்மதி, கதிர்வேல் தம்பதியிடம் மனைவி செல்வி வாங்கிய கடன் தொகையை என்னிடம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். கணவர் ஒருபுறம் என்னிடம் தருமாறும் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலை காரணமாக கடனை திருப்பித் தர முடியாமல் கால அவகாசம் கேட்டுள்ளனர். இருப்பினும் கடனை திருப்பித் தரவில்லை என காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் டிஎஸ்பி சந்திரசேகர், வளர்மதி-கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து தரையில் கீழே அமர வைத்து, பணத்தை ஒரு மணி நேரத்தில் தர வேண்டும் என தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த வளர்மதி, கதிர்வேல் ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதால் தாய் கிருஷ்ணவேணி அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்காததால்  டிஎஸ்பி மிரட்டியதால் தான் மகள், மருமகன் இருவரும் காணவில்லை எனவும் உடனடியாக மகள், மருமகனை கண்டுபிடித்து தர வேண்டும் 

மேலும் டிஎஸ்பி அலுவலகம் அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் மிரட்டல் விடுத்த டிஎஸ்பி சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் காவல் நிலையம் முன்பு கிருஷ்ணவேணி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட காவல்துறையினர் கிருஷ்ணவேணி மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *