அரசு மருத்துவமணைக்கு எதிராக ஒரு மாவட்டமே ஒன்று திரண்டு போராட்டம்..!

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக கடந்த 2ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால்தான் மாணவன் உயிரிழந்தான். எனவே காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டினர்.

சிறுவன்  பாலமணிகண்டன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழுவினர் காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள  கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மருந்தகம், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து  மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்ததால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் காரைக்கால் நகரின் திருநள்ளாறு சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

காரைக்கால் துறைமுகத்தில் மீன் விற்பனை நிறுத்தப்பட்டது. பந்த் காரணமாக நேரு மார்க்கெட்டில் அனைத்து கடைகள் மூடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.  முக்கிய கடை வீதிகள், காரைக்கால் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் பெரிதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *