நரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பிய மகன்

தந்தையர் தினத்தன்று “என் அப்பா” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு. மோகன் ராஜ் அவர்களின் கட்டுரை…

16.06.2022
நரக வாசல்
பூலோகம்

அன்புள்ள ராசாவுக்கு ….

நலம் நலமறிய ஆவல் என்னும் கடிதம் எழுதத் தொடங்கும் பொழுது கேட்கப்படுபவை. ஆகையால் நானும் அவ்வாறே மனமின்றி தொடங்குகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு எண்ணிப் பார்க்கையில் என் ஈரக்குலை நடுங்குகிறது. கொரோனா என்னும் ஆளைக் கொல்லும் பெருந்தொற்று ஊரெல்லாம் உயிரை பலி வாங்கிக் கொண்டிருக்கும் சமயம் அது.

எப்படி என்று தெரியவில்லை; அந்த நோய் என்னையும் ஆட்கொண்டது. முதலில் காய்ச்சல் தான் இருந்தது. அதன்பிறகு இருந்த உடம்பு வலியை சொல்லி புரிய வைக்க முடியாது. அந்த அளவிற்கு கடுமையாக ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாக வலியில் உருண்டது. உண்ணும் உணவின் சுவையும் தெரியாமல் வெறும் சக்கையை உண்பது போன்ற உணர்வு என்னுள் ஏற்பட்டது. என்னை நீ வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையெனில் இன்று நான் ஒரு இக்கடிதத்தை எழுதி இருப்பேனா என்பது ஐயமே.

Happy Father's Day 2021: Check date, importance, history of this special  day; Here's all you need to know | Zee Business

மருத்துவமனையில் சேர்ந்த நாள் முதல் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் சிறுநீர், குருதிச் சோதனை எடுக்கப்பட்டது. மறுப்பக்கம் ‘இசிஜி’ எடுக்கப்பட்டது. கொரோனா பரவுகின்ற சூழல் இருந்ததால் அச்சோதனையும் எடுத்தனர்.கொரோனா நோயாளிகளின் கூடாரமாக இருந்த மருத்துவமனையில் ஒரு நிமிடமும் நகராமல் என்னை நீ தானே பார்த்துக் கொண்டாய், நானோ வசதியான படுக்கையில் நீயோ எதுவுமின்றி தரையில் கிடந்தாய், அன்று இரவு தூங்கினாயா என்று கூட தெரியவில்லை. அன்று மட்டுமல்ல நான் மருத்துவமனையில் இருந்த அந்த 7 நாட்களும் உன் தூக்கத்தை மறந்து என் விழிப்பிற்காக போராடிக் கொண்டிருந்தாய் என்பதை நன்கு உணர்ந்தேன்.

மறுநாள் சோதனை முடிவுகள் வெளிவந்தது. குருதி, சிறுநீர் சோதனையில் பிரச்சனை இல்லை என மருத்துவர் சொல்ல உடனே நீ குறுக்கிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவே இதில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்டறிந்தாய். அதிலும் பிரச்சனை ஒன்றுமில்லை என மருத்துவர் கூறினார். அதன் பிறகே நீ நிம்மதி அடைந்தாய்.

ஆனால், அந்த நிம்மதி சில நிமிடங்களில் கானல் நீரானது. கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால் எனக்கு பயத்தில் கை கால் நடுங்கியது. எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் என்னருகே வந்து ஆறுதல் கூறினார். சிறு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது போன்று ஊட்டிவிட்டாய். செயற்கை சுவாசத்தால் சுவாசித்துக் கொண்டிருந்தேன்; சுவாசக் கருவியை எடுத்தால் ஆபத்து என்பதால் காலை கடன்களையும் கவனித்துக் கொண்டாய். நாட்கள் கடந்தது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மோசமாகவே சென்றது. ஆகையால் என்னை விரைவு காலச் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

father son shake hands agreement happy Stock Footage Video (100%  Royalty-free) 27788815 | Shutterstock

யாருக்கும் அனுமதியில்லாத அந்த விரைவுகாலச் சிகிச்சைப் பிரிவில் எனக்காக உள்ளே நுழைந்து செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்ததை என்னால் மறக்க முடியுமா? அச்செயலுக்காக செவிலியர்கள் எத்தனை முறை உன்னை வசைபாடி இருப்பார்கள். அதையும் பொருட்படுத்தாமல் வேளைக்கு வேளை மாத்திரை, மருந்து கொடுக்கப்படுகிறதா என்பதை கவனித்ததையும் நான் அறிந்தேன். இரவில் தூக்கமில்லாமல் என்னுடைய நிலைமையை வந்து வந்து பார்த்து சென்றதாக செவிலியர் கூறினார். அதை நினைக்கும் பொழுது ஒரு பக்கம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தேன். மறுபக்கம் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது.

எது எப்படியோ அனைவரிடமும் நீ சொன்ன மாதிரியே என்னை நல்லபடியாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தாய். ஊரே உன்னை மெச்சியது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் உனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தாய். என்னை காப்பாற்ற இரவும் பகலுமாய் கண்விழித்த உன்னை கவனிக்க முடியாத பாவியானேன். நீயோ எனக்கு உயிர்கொடுத்து வாழவைத்த தெய்வமானாய். கொரோனாவிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து வாழவைத்த தெய்வமானாய்.கொரோனாவிலிருந்து மீண்டு மீண்டும் எங்களுடன் இணையாமல் போனாயே.

நான் பிறந்து ஒரு வயதிற்குள்ளே என் தந்தையை இழந்தேன். என் தந்தையின் முகத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. உன் தந்தை முக ஜாடையிலே உனக்கு மகன் பிறந்துள்ளான் என்று எல்லோரும் கூறுவார்கள். அச்சொல்லை இன்று பலிக்க வைத்துவிட்டாயே ராசா. என் தந்தையாகவே என் முன்னாள் வளர்ந்த நீ எனக்கு உயிர் கொடுத்த தந்தையாகவே நிலைத்துவிட்டாய், என் தந்தையாகவே உருமாறினாய், அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உன் மகனாக பிறக்க வரம் கொடு. உன் மடியில் விளையாடி மகிழ. தந்தைக்கு தந்தையாய் இருந்தே நீயே சிறந்தவன். 3 உமக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.

இப்படிக்கு
உனது உயிரான
மகனானவன்

உறைமேல் முகவரி
அன்பு தந்தையானவன்,
சொர்க்க வாசல்,
மேலோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *