மாணவிகளிடம்  மசாஜ் செய்ய சொல்லி டார்ச்சர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!

மேட்டூர் அருகே பள்ளி மாணவிகளிடம்  மசாஜ் செய்ய சொல்லி, டார்ச்சர் செய்த  தலைமை ஆசிரியரை மேட்டூர் மகளிர் போலீசார் போக்சோ- வில் கைது செய்துள்ளனர்.

மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்கல்லூர்  பகுதியில் உள்ள  அரசு துவக்கப்பள்ளியில், அந்த  சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். 

தலைமை ஆசிரியர் ராஜா, பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை கால்களை பிடித்து விடுமாறும், மசாஜ் செய்து விடும் படியும் கூறி டார்ச்சர் செய்ததாக  புகார் எழுந்தது.  இதுகுறித்து மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறி அழுததாகவும்  கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று திடீரென கருங்கல்லூர் அரசு துவக்கப்பள்ளி முன்பு திரண்டு மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் ராஜாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அறைக்குள் இருந்த  தலைமை ஆசிரியரை நோக்கி  கற்களும்,  செருப்பையும் வீசினர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் , மேட்டூர்  போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், தாசில்தார் முத்துராஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பெற்றோர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.  

மேலும்   தலைமை ஆசிரியரை பொதுமக்கள் தாக்கக்கூடும் என்பதால் ஒரு அறையில் அடைத்து  வைத்தனர்.  

அப்போது பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டிஎஸ்பி மரியமுத்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு,  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,  தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி  தெரிவித்ததோடு,  தலைமை ஆசிரியர் ராஜா வை  விசாரணைக்காக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் உரிய விசாரணை நடத்திய போலீசார், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா மாணவிகளிடம் மட்டுமல்லாமல் சில ஆசிரியைகளிடமும் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டு தலைமை ஆசிரியர் ராஜாவை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் கல்வித் துறை அதிகாரிகள் ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பள்ளி சிறுமிகளிடம்  மசாஜ் செய்ய சொல்லி, டார்ச்சர் செய்த தலைமையாசிரியர் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *