HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 74

நிலைமாறும் விருப்பங்கள்

விருப்பம் இல்லாமல் நாம் எதைச் செய்தாலும் அவை முழுமை பெறாமல் ஏனோ தானோ என்று முடியும். விருப்பு வெறுப்புகளைக் கடந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள் எனும் அறிவுரையும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும். என்ன செய்வது என்ற குழப்பமும் வந்திருக்கும். என்னதான் செய்வது எனும் தடுமாற்றம் எல்லாம் வேண்டாம். எது எப்போது வேண்டுமோ அதை அப்போது கவ்விக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது எனும் பொன்மொழியும் நமக்கு தரப்பட்டிருக்கும். மொத்தத்தில் விருப்பங்கள் வேண்டுமா? வேண்டாமா? எனும் குழப்ப நிலைக்குள் நாம் சில நேரம் சென்றிருப்போம். எது எப்படியோ நாம் வாழ்வதற்குத் தேவையான நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு கடந்து போவோம் எனும் எண்ணத்திற்கு வந்திருப்போம்.

இன்னைக்கி இருப்பது நாளைக்கு இருக்கபோவுதாக்கும், இருக்கிறத அப்படியே அனுவபச்சிட்டு போக வேண்டியதுதான் எனும் மாய மனநிலைக்கு நாம் அவ்வப்போது மயங்கி விடுவதுண்டு. நமக்குக் கிடைக்காத ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டு இருபதுதானே ஆசை. கிடைப்பதை நன்கு அனுபவித்து கிடைக்காததைப் பற்றி கவலை கொள்ளாது இருக்கணும் புரியுதா எனும் அறவுரை அவ்வப்போது நமக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்தளவிற்கு ஆசை மோசமானதா? மூவாசைகளான, மண், பெண், பொன் இவற்றைத் தவிர்த்து, மற்றனைத்தும் நல்ல ஆசைகள்தான் எனும் அன்பான அறிவுரையை கேட்டு நாம் அசந்து போயிருப்போம். நாளடைவில் இவை கசந்து போன ஆசைகளாகக் கூட மாறியிருக்கும். ஒன்றை நான் அனுபவித்தப் பிறகுதான் அதன் தன்மையை மற்றும் ஆழத்தை உணர்வேன் என்று அடம்பிடித்தால், நாம் வாழ்நாள் முழுதும் எதையும் முழுமையாக உணராமல் காலம் கடந்து விடும். ஆசை என்பது நமக்குத் தேவையானதை மனதிற்குள் கொண்டு வரும் ஓர் உணர்வு. அதுதான் நமக்கான உணவு என்று நினைக்கும் போது சிக்கல் உருவெடுக்கும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும், ஏதாவது தேவைகள் எப்போதும் நிச்சயமாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு வெவ்வேறு வரைமுறைகள் கொடுத்தாலும் அதன் அடிப்படைத் தன்மை என்னவோ நம் எண்ண ஓட்டங்கள்தான். அவைதான் விருப்பங்களாக வெளிவருகிறது.

எல்லாவற்றையும் அடைய நினைப்பது ஆசை, அந்த எல்லாவற்றையும் செய்யும் எண்ணம் இருப்பது விருப்பம், அந்த விருப்பத்தை செயல்படுத்த சில குறிக்கோள்கள், அடிப்படைத் தகுதிகள் என்பது அவசியமான ஒன்று. சிலர் தான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை மட்டுமே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசை விருப்பமாகி, அந்த விருப்பத்தை குறிக்கோளாக மாற்றியவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்த சிந்தனை முறையை வைத்திருப்பார்கள். தங்களுக்கென தனி சிந்தனை, புதுப்புது எண்ணங்கள், ஒரு பிரச்சனையை தீர்க்கின்ற விதம், தன்னைச் சுற்றி நடப்பவற்றில் முழுக் கவனம், தன்னோடு இருப்பவர்கள், தன் எண்ணத்திற்கு செயல்வடிவம் தருபவர்களைப் பற்றி சிந்திப்பது, இயற்கையை ஆழ்ந்து நோக்கி அதன் செயல்போக்கில் நடந்து கொள்வது என்று தனித்துத் தெரிவார்கள். ஆதலால் ஆசை எல்லாவற்றிற்கும் ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. சிறப்பான குறிக்கோளுக்கு ஆணி வேராகவும் இருக்கிறது. ஒவ்வொன்றையும் வெவ்வேறாக பிரித்துப் பார்த்து முடிவெடுப்பது மூலம் தான் நாம் சிறந்த ஆளுமையாக வெளிப்படும் ஆற்றல் வருகிறது. ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. ஆதலால் அதன் வகை அறிந்து, வழி தெரிந்து பயணிப்பதுதான் சிறந்த அணுகுமுறையாகும்.

ஆசையைக் கடந்து விருப்பங்களாக வந்த பின் அது அப்படியே நிலைத்து நிற்கும் என சொல்லிவிட முடியாது. சூழலும், நம் மன நிலையும் அதை சில சமயங்களில் மாற்றிவிடும். அப்படி மாற்றும் போது, நாம் தோல்வி அடைகிறோம் என்று நினைக்காமல், அதன் அடுத்த நிலை கண்டு நகர்வது நல்லது. நாமாகவே சில சோம்பேறித்தனத்தால் அதை மாற்றுவது கேலிக்குரியதாக மாறும். ஏன் அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை எனும் ஆராய்ந்து முடிவுகளைக் காண்பது கேள்விக்குரியதாக மாறினாலும் அதன் தாக்கத்தை நம்மை சுற்றி உள்ளவர்கள் உணர்வார்கள். எவரின் விருப்பத்திற்காகவும் நாம் வாழவில்லை, நம் விருப்பத்திற்காக அது முறையான வழிமுறையில் பயணித்து அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் எந்த மனக்குறையும் நமக்கு வரப்போவதில்லை. பிறரை தன் வயப்படுத்த அல்லது திருப்தி படுத்த நாம் எடுக்கும் விருப்பங்கள் தோல்வி காணும் போது நிச்சயம் நமக்கான மதிப்பை குறைக்கும், நம் தன்னம்பிக்கையை தகர்க்கும்.

பல்வேறு விருப்பங்களோடு கனவுகளோடு பணியில் சேரும் பலர், அதன் முழுமையான ஆழத்தை அறியாமல் இடையிலேயே தனது விருப்பங்களை மாற்றிவிடும் அல்லது கைவிடும் நிலை ஏற்படும். தன் வேலை மீது முழுக்கவனம் வைக்காமல் பிறர் வேலை மீது மட்டும் முழுக்கவனம் செலுத்தி தன் விருப்பத்தை பாழாகும் செயல் பல்வேறு நிறுவனங்களில் நடப்பதுண்டு. அந்த வேலைய மட்டும் என்கிட்டே கொடுத்தா சும்மா பின்னி எடுத்துருவேன் என வீர வசனம் பேசித் திரிபவர்களும் உண்டு. உண்மையான விருப்பங்களில் நிலைகொண்டு உயர்வு நோக்கி வாய்ப்புகள் கிடைக்கும் நேரமெல்லாம் அதை தனக்கு வசப்படுத்தி முன்னேறும் பலரை நான் கண்டுள்ளேன். வெறுமனே குற்றமும், குறையும் கூறிக்கொண்டு தன் சுற்று வட்டத்தையும் எதிர்மறை எண்ணங்களால் சுக்குநூறாக்கி விடுபவர்களுக்கு உண்டு. பணியாளர்களை உயர்த்த மற்றும், அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லா நிறுவனங்களிலும் சில திட்டங்கள் உண்டு. அதை Job Rotation என்று அழைப்பார்கள். எதிலெல்லாம் நமக்கு விருப்பம் உண்டோ அதில் நாம் விண்ணப்பித்து உயர்வு காணும் வாய்ப்பு மனித வளத்துறை மூலம் செயல் படுத்துவார்கள். அதை சிக்கெனப் பிடித்து மேல வந்த பலர் இன்று எத்தனையோ உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள். அதில் நாமும் இணைவோம்.

நிறைவேறாத விருப்பங்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு, வாய்ப்புகள் உள்ளவற்றை நோக்கி நகர்வதில் தவறொன்றும் இல்லை. விருப்பங்கள் மாற்றத்திற்கு உரியவை, யாருடைய ஏமாற்றத்திற்கும் இல்லாமல் தனக்கான ஏற்றத்திற்கு உரியதாக இருந்தால் விருப்பங்கள் நிலைமாறட்டும். அதன்மூலம் நம் நிலையும் மாறட்டும்.

ஆசைகளை அறவே அழித்துவிட்டால், மனமும் அழிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய் விடுவான். – ஹெல்விடியா.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. சு சுசிலா says:

    அதனால் தான் நமது நாட்டில் சில கொள்கைகள் அழிந்து விட்டது. நம் நாட்டில் தோற்றுவித்த மதகுரு கொள்கை மேலை நாடுகளில் வளர்ச்சி அடைந்தது. ஆசை வேண்டும் ஆனால் பேராசை வேண்டாம். ஆசையை அழகாகச் சீரமைப்பு செய்து வாழலாம். வாழ்க வளமுடன்