HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 68

எங்கு தொட்டாலும் இன்பம் இன்பம்

இன்பம் இன்பம் இன்பம், இது மட்டுமே எனக்கு வேண்டும் மற்றதெல்லாம் எதற்கு.? மனிதனாய் பிறந்தால் இன்பத்தை அனுபவிக்காமல் வாழ்ந்தென்ன பயன். தாயும் தந்தையும் கூடிய இன்பத்தால் தான் நாம் பிறந்தோம். அந்த இன்பம் தொடரவேண்டும் தானே? அந்த இன்பத்தை தொடர்வதில் கொஞ்சம் இடர் வந்தாலும் அதைத் தாங்கிட முடியா துன்பத்தை யார் தந்தது.? நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட செயல்முறை அவ்வளளுதான். இன்பத்தின் ஆழத்தினையும், துன்பத்தின் தூரத்தினையும் கண்டுகொள்ள முடியுமென்றால், நீங்கள் சக மனிதல்ல மாறாக சாதித்த மனிதன் எனும் நிலைக்கு வந்துவிட்டீர்கள் என்பதுதான் பொருள்.

சென்றவாரம் பொருளுள்ள வாழ்க்கையைப் பற்றி நான் எழுதிய கட்டுரை பலரது உள்ளத்தை வருடியதாக தொடர் அழைப்புகள் வந்தது கண்டு மகிழ்ச்சி. பொருளுள்ள வாழ்க்கையில் இன்பம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, அதை இழந்தோம் என்றால் தவிக்கும் நிலைதான் எப்போதும். அறத்தின் வழி நின்று பொருள் தேடி, முறையாக இன்பம் துய்த்து, வாழுகின்ற வாழ்வியல்தான் நம்முடையது. அதை அடைவதுதான் நம் அடிப்படை நியதி என்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்தியம்புவது நம் ஒப்பற்ற நூலான திருக்குறள்தான். அறம், பொருள், இன்பம் எனும் மூவகைப் பால்தான் நம் வாழ்வியலின் அடிப்படை. இப்படி இருக்கும் போது இன்பமாய் இருப்பதில் என்ன தவறு. இன்பமாய் இருப்பதில் தவறல்ல, தவறான வழியில் இன்பமாய் இருப்பதுதான் தவறு.

அந்த இன்பத்தை நாம் எப்படி அடைவது, ஒவ்வொருவருக்கும் ஒரு வழி இருக்கும், அதில் அறமும், பொருளும் இருந்ததென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த இன்பம்தான் நமக்கு அகமகிழ்ச்சி தரும். கண்களில் காதலும், பேச்சில் பாசமும் பொங்கி வருவதுதான் எனக்கு இன்பம். இல்லையில்லை அதையெல்லாம் தாண்டி பிடித்ததை செய்து முழு மகிழ்வோடு வாழ்வதுதான் இன்பம். இவை எல்லாவற்றையும் விட, பிடித்ததை, பிடித்தவர்களோடு செய்வது இன்பம் மட்டுமல்ல அதுதான் பேரின்பம் எனும் வரையறைகள் பல உண்டு. இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது ஏன் நம்மை விட்டுச் சென்றது என்பதை சிந்தனை செய் என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளதை இங்கு நாம் அசைபோட வேண்டும்.

இன்பத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள், உங்கள் வேலையை செவ்வனே செயுங்கள் அது உங்களைத் தேடிவரும், என்று கான்பூசியஸ் சொல்லியதையும் நாம் உணர்ந்ததாக வேண்டும்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல, நம்மிடம் உள்ளதை எப்படி உளப்பூர்வமாக அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் இன்பம் மதிப்படப்படும் என்று ஸ்பர்ஜியன் கூறுகிறார். இவற்றை ஒருசேர அசைபோட்டுப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். நம்மிடம் உள்ளதை உணர்வதே பேரின்பம் என்று. அந்த உணர்தல் வந்துவிட்டால் எதைப் பார்த்தாலும் இன்பம்தான், எதைத் தொட்டாலும் இன்பம்தான்.

கிரேக்க வரலாற்றில் Midas Touch “மிடாஸ் தொடுதல்” எனும் சொற்றொடர் உண்டு. இது கிரேக்க தொன்மவியலில் ஒரு கதாபாத்திரமான மிடாஸ் மன்னரின் கதையிலிருந்து வருகிறது, அவருக்கு டயோனிசஸ் கடவுளால் ஒரு விருப்பம் வழங்கப்பட்டது. தான் தொட்டது எல்லாம் தங்கமாக மாற வேண்டும் என்று மிடாஸ் விரும்பினார். ஆரம்பத்தில் நன்றாகத் தெரிந்தது, பிறகு அவருக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்தது.

தொடும் அனைத்தும் தங்கமாக மாறியதால் அவரால் உண்ணவோ, குடிக்கவோ, எதையும் தொடவோ முடியாமல் தவித்தார். இதனால் எவ்விதத் தொடர்பும் இன்றி தனிமையில் வாட ஆரம்பித்த பின்புதான் தெரிந்தது. செல்வம் என்பது பெறுவதில் அல்ல மாறாக கொடுப்பதிலும் அதை அனுபவித்தலிலும் மட்டும் தான் அடங்கி உள்ளது என்று. இதைச் செய்யும்போது கொடுப்பவர் தரும் தொடுதலும் பெறுபவர் இடும் தொடுதலும் அப்பொருளுக்கு கூடுதல் இன்பம் தரும். 

இந்த நவீன மேலாண்மையில் “மிடாஸ் தொடுதல்” என்ற சொற்றொடர் ‘செய்யும் செயல் எல்லாவற்றிலும் வெற்றிபெற குறிப்பிடத்தக்க திறனைக் கொண்ட ஒருவரை குறிக்கப் பயன்படுகிறது. அப்படிப்பட்டத் திறனால் எதைத் தொட்டாலும் வெற்றியாகவும், இன்பமாகவும் மாற்றுவதற்கான சிறப்புத் தன்மை உள்ள மனிதர்களை நாம் பார்த்திருப்போம். அப்படிப் பட்டவராக நாமே மாறினால் பேரின்பம் அன்றி வேறென்ன.!

காதலிலும் காமத்திலும் கட்டுண்டு கிடப்பதே கட்டற்ற இன்பம் என்பதல்ல. அதுவும் ஒருவகை இன்பம்தான் ஆனால் அதுதான் ஒரே இன்பம் எனும்போது இன்பத்திற்கு சளி பிடிக்கும். திறனறிந்து செயல்பட்டு, நமக்கான புரிதலை அதிகப்படுத்தி, எண்ண ஆற்றலை ஆழப்படுத்தும் போது, நாம் காண்பதெல்லாம் இன்பம்தான், தொடுவதெல்லாம் வெற்றி எனும் பேரின்பம்தான். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ எனும் கவிஞர் புலமைப்பித்தனின் வரிகள் கண்டு நமக்கு ஒரு மயக்கம் வரலாம், அதிலென்ன தயக்கம். அதுவும் நம் வாழ்வின் ஓர் அங்கம்தானே. அதையும் கடந்து அடுத்ததென்ன எனக் கடந்து செல்லும் மனப்பக்குவம் வந்தால், இன்பம் பேரின்பமாகவும், பேரின்பம் மட்டற்ற இன்பமாகவும் உருமாறும்.

இன்பத்திற்கு இதுதான் எல்லை என்று நாம் வரையறுக்க முடியாது, அது கட்டற்ற எல்லை உடையது. துன்பத்திற்கு நாம் எல்லையிட முடியும், அது முழுக்க முழுக்கு நம் கையில்தான். துன்பத்தைக் கூட இன்பமாய் மாற்றும் மாயம் நமக்கிருக்கும்போது எல்லையில்லா இன்பம் காண நமக்கேது தடை. இந்தத் தடை தகர்ந்தால் எதைத் தொட்டாலும் இன்பம். எங்கு தொட்டாலும் இன்பம் இன்பம் அன்றி வேறென்ன.!

இன்பமாய் இருப்பதில் தவறல்ல, தவறான வழியில் இன்பமாய் இருப்பதுதான் தவறு.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை தலைமை மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Ma Tholkappiyan says:

    ‘எங்கு தொட்டாலும் இன்பம்’ கட்டுரை அருமை! வாழ்த்துக்கள்!