தற்கொலை செய்த வேலூர் சிறுமி புகைப்படத்தை மதுபாட்டிலில் ஒட்டுங்கள் ! -தேமுதிக விஜயகாந்த்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணுபிரியாவின் புகைப்படத்தை மதுபாட்டிலில் ஒட்டுங்கள் என தமிழக அரசை தேமுதிக தலைவர விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில் மீது ரூ.10 கூடுதலாக விற்பது குறித்தும் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் குடிக்கிறீர்களா என தமிழக அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்ப சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் என்ற 17 வயது மகனும் விஷ்ணுபிரியா எனும் 16 வயது மகளும் உள்ளனர்.பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு கற்பகத்துடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பாதிக்கும் ஊதியத்தை குடித்தே தீர்ப்பதால் கற்பகமும் பிரபுவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. அப்பாவின் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு விஷ்ணுபிரியா பல தடவை கூறியும் அவர் கேட்டதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் குடித்துவிட்டு தந்தை பிரபு கலாட்டா செய்வதால் அக்கம் பக்கத்தினர் முன்பு குடும்பத்திற்கே அவமானமாக இருந்தது. இந்த நிலையில் எப்போதுமே வீட்டில் சண்டையும் சச்சரவும் இருந்ததால் மனவேதனையில் விஷ்ணுபிரியா இருந்ததாக தெரிகிறது.இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து வீட்டிற்கு தாய் கற்பகம் வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே போய் பார்த்த போது விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியில் கற்பகத்தின் அலறல் சப்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.பின்னர் விஷ்ணுபிரியாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விஷ்ணுபிரியாவின் வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விஷ்ணுபிரியா எழுதியிருக்கையில் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆன்மா சாந்தி அடையும். போயிட்டு வரேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *