முதல்வரின் குட் வில் புக்கில் இறையன்பு!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில் அவருக்கு வேறு ஒரு முக்கிய பதவி கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு அடுத்த மாதம் ஓய்வு பெற போகிறார். அவருக்கு பதில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற ரேசில் யாருக்கு அந்த பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதில் ராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனாவுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் ஸ்டாலினை பொருத்தமட்டில் தமிழக தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவுக்கே அந்த பதவியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். எனவே தற்போது அதையே தமது அரசு செய்தால் தனக்கும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் இறையன்புவுக்கு அதே பதவியை நீட்டிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாக சொல்கிறார்கள். அதே சமயம் இந்த பதவி நீட்டிப்பை இறையன்புவும் விரும்பவில்லை என்றும் தனக்கு அடுத்து வேறு ஒரு திறமையான அதிகாரிக்கு தலைமைச் செயலாளர் போன்ற உயர் பதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறாராம். எனினும் இறையன்பு ஓய்வு பெற்றாலும் அவருடைய சேவை இந்த அரசிற்கு தேவை என முதல்வர் கருதுகிறாராம்.

அதனால் இறையன்பு ஓய்வு பெற்றாலும் அவரும் அரசு இயந்திரத்தில் ஒரு கருவியாக இருப்பார் என்கிறார்கள். தமிழக அரசில் முக்கிய பணியை அவருக்கு கொடுக்கலாம் என முதல்வர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி தலைமை தகவல் ஆணையர் (Chief Information Commissioner CIC) என்ற பதவியை கொடுக்கலாம் என எண்ணத்தில் இருக்கிறாராம். இந்த பதவிக்கு ஆணையராக இருந்த ராஜகோபால் என்ற ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. கிட்டதட்ட இந்த பதவி ஒன்றரை ஆண்டுகளாக காலியாகவே இருக்கிறது. இந்த பதவிக்கு ஒரு அதிகாரியை தேர்வு செய்ய நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை எந்த அதிகாரியையும் இந்த குழு பரிந்துரைக்கவில்லை.எனவே இந்த பதவிக்கு இறையன்புவை கொண்டு வர முதல்வர் முடிவு செய்துள்ளாராம். இதன் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகள், திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் சிஐசியின் பொறுப்பாகும். எனவே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த அதிகாரியாவது பதில் அளிக்க தவறியதாக புகார் எழுந்தால் அவர் மீது தலைமை தகவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க முடியும்.அது போல் தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர் பதவியும் காலியாக உள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தலைவராக 2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் போட்டித் தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதவி நீண்டநாட்களாக காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக உள்ள முனியநாதன் ஐஏஎஸ்ஸை தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை முனியநாதன் பொறுப்பு தலைவராக இருப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த பதவிக்கு இறையன்புவை நியமிக்கலாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறதாம். அதனால் இறையன்பு தலைமை தகவல் ஆணையராகிறாரா அல்லது டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/new-post-will-be-given-to-iraianbu-after-his-retirement-510234.html?story=3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *