கர்நாடகாவின் கோடீஸ்வர வேட்பாளர் யார் தெரியுமா?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து கொண்டவர்கள் யார்? என்பது தொடர்பான சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமாருக்கே 3 வது இடம் தான் கிடைத்துள்ளதாம். மாறாக டிகே சிவக்குமாரை பின்னுக்கு தள்ளி முதல் முதல் 2 இடத்தில் உள்ள வேட்பாளர் யார்? என்பதற்கு விடை இங்கே உள்ளது.கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கர்நாடகா தேர்தலில் தற்போது 2,586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 790 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளையும், 255 பேர் மாநில கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். 640 பேர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளிலும் இருந்தும், 901 பேர் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தான் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் குறித்த முக்கிய தகவலை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள் விபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் போட்டியிடும் 2,586 வேட்பாளர்களில் 1,087 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 42 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 35 சதவீத வேட்பாளர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் தற்பாது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் யார்? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் யூசுப் செரிப் உள்ளார். இவர் பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு மொத்தம் ரூ.1633 கோடி உள்ளது. இவர் தான் கர்நாடகாவின் கோடீஸ்வர வேட்பாளராவார்.இந்த பட்டியலில் 2வது இடத்தில் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளராக என்டிபி நாகராஜூ உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,609 கோடியாக உள்ளது. இவர் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பாஜகவுக்கு தாவிய நிலையில் எம்எல்சியாக உள்ளதோடு தற்போது மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ராமநகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதி வேட்பாளருமான டிகே சிவக்குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடியாக இருக்கிறது. கடந்த 2018 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு ரூ.595 கோடி வரை உயர்ந்துள்ளது. அதாவது டிகே சிவக்குமாரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,214.93 கோடியாக இருக்கிறது. மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை கணக்கிட்டால் அவரது மொத்த மதிப்பு ரூ.1,415 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து இல்லாத வேட்பாளர்கள்: இவ்வாறு ரூ.1000 கோடிக்கு அதிக சொத்து கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் தான் தங்களின் பெயரில் சொத்துகள் இல்லாத 14 பேர் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இதில் துமகூர் மாவட்டம் குப்பி தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சிவண்ணா ஒருவர் ஆவார். இவர் தனது பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை எனவும், சொத்து மதிப்பு பூஜ்ஜியம் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் இவர் தவிர மேலும் 13 வேட்பாளர்களும் தங்களின் பெயரில் சொத்துகள் இல்லை என தெரிவித்துள்ளனர் என ஏடிஆர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *