அதானி கொள்ளைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்… கே.எஸ். அழகிரி 

சிதம்பரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி கலியபெருமாள் நினைவு தின நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்பு. பாஜக தலைவர் அண்ணாமலை விரக்தியோடு பேசுவதற்கு அவரது உள்கட்சி விவகாரமே காரணம் என கே.எஸ். அழகிரி பேட்டி. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியை பேசவிட்டு, அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அழகிரி வலியுறுத்தல்

கடலூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பி பி.பி. கலியபெருமாளின் நினைவு தின நிகழ்ச்சி இன்று சிதம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று முன்னாள் எம்பி கலியபெருமாளின் திருஉருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி அப்போது கூறியதாவது

தமிழக அரசின் பொதுவான வரவு செலவு திட்டமும், வேளாண்மை வரவு செலவு திட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. படாடோபம் ஆடம்பரம், வெற்று அறிவிப்பு இல்லாமல் வளர்ச்சியை நோக்கி இரண்டு வரவு செலவு அறிக்கைகளும் உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜன் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி இருக்கிறார். இது இந்தியாவில் யாரும் செய்ய முடியாத விஷயம். அதனால் அவரை பாராட்டுகிறேன். தமிழக முதலமைச்சர் வேளாண்மையில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது வேளாண் பட்ஜெட் மூலம் தெரிய வந்துள்ளது. கொள்முதல் விலையை அதிகரித்து இருப்பது வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் இழப்பீடை சரி செய்ய காப்பீடு திட்டம், 14 ஆயிரம் கோடிக்கு கூட்டுறவு கடன், புதிய விவசாய மின் இணைப்பு உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். நாடாளுமன்ற வரலாற்றிலேயே நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தங்களது எதிர்ப்பை உரக்க சொல்ல எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன. எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது என ஐரோப்பிய நாடுகளில் ராகுல்காந்தி பேசியிருக்கிறார். ஜனநாயகமே தவறு என்று அவர் பேசவில்லை. பெருமைமிகு ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தம் சிதைக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறார். அதைச் சொன்னால் அது இந்தியாவிற்கு எதிரான கருத்து அல்ல. மோடி மட்டுமே இந்தியா இல்லை.

ஆனால் இப்போதும் நாடாளுமன்றத்தில் பேச அவரை அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவரை பேச விட்டு, அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தால் பிரச்சனை முடிந்து விடும். நாடாளுமன்றம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மோடிதான். ஏனெனில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் மூலமாக சர்வாதிகாரியாக மாறி உள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யும் உரிமையை பெற்று தர வேண்டும்.

பாஜகவின் தலைவர் அண்ணாமலை விரக்தியோடு பேசுவதற்கு அவர்களது உள்கட்சி விவகாரம்தான் காரணம். அதிமுகவோடு கூட்டணியே இல்லை என அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அவரது கட்சியில் உள்ள வானதி சீனிவாசன், முரளிதர்ராவ் அதிமுகவோடு கூட்டணி என்கிறார்கள். அண்ணாமலை சொல்லும் கேள்விக்கு அதிமுக பதில் சொல்வதற்குள் அவர்களது பாஜக கட்சியினரே பதில் சொல்கிறார்கள். ஒரு தேர்தல் அறிக்கை என்பது 5 ஆண்டுகளுக்கானது. ஆட்சிக்கு வந்த அன்றே அனைத்தையும் நிறைவேற்றிட முடியாது. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருக்கிறார். இன்று காலை கூட அவரிடம் பேசினேன்

இந்தியாவில் தனியார் கார்ப்பரேட்டுகள் வியாபாரம் செய்ய உரிமை உண்டு. அவர்களுக்கு கடன் வழங்குகிறார்கள். அது தவறு இல்லை. ஆனால் மோடியின் நண்பர்களுக்கு மட்டும் இவையெல்லாம் அத்துமீறி செய்யப்படுகிறது. அதனால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானிக்கு எதிராக பேசினால் இந்தியாவிற்கு எதிராக பேசுகிறார் என கூறுகின்றனர். அதானிதான் இந்தியாவா? பணத்தை ஏமாற்றி விட்டு வெளிநாடு சென்றவர்களை வெளிப்படையாக காப்பாற்றுகிறார்கள். 

ஒரு தொழில் நடப்பதற்கு நிலம் வேண்டும். அதனால் நிலத்தை கையகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் நில உரிமையாளர்களுக்கு சொற்பமான நஷ்ட ஈட்டை  அளித்து வெளியே அனுப்பக் கூடாது. அவர்கள் கொடுக்கும் மதிப்பிற்கு இணையான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்.வேளாண் பட்ஜெட்டில் மிளகாய், வெங்காயம், சிறு தானியங்களுக்கு கூட முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த பொருட்களை மேம்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாமே நல்ல திட்டங்கள்தான். வேளாண் அமைச்சர் மிகுந்த கவனத்தோடும், திறமையோடும், தொலைநோக்கு பார்வையோடும் இந்த நிதிநிலை அறிக்கையை சிறப்பாக செய்து இருக்கிறார். இதைவிட எதை எடப்பாடி எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை பாஜக ஏற்க மறுக்கிறதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ். அழகிரி, அவர்ளுக்கு மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது. அதனால்தான் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. பாஜக வளர்ந்து விட்டது. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார் என கூறியவர்கள் யாரும் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்கே வரவில்லை. பேசுவது என்பது வேறு செயல்படுவது என்பது வேறு

அதிமுகவில் தனி மனிதர்களை மையமாக வைத்து அரசியல் செய்யப்படுகிறது. கொள்கை கிடையாது. லட்சியம் கிடையாது. அதனால் பிளவுபடதான் செய்யும். மோடி இவர்களது 10 ஆண்டு கால ஆட்சியில் இவர்களை நசுக்கி இருக்கிறார். ஆனால் மோடிக்கு எதிராக இவர்கள் செயல்பட தயாராக இல்லை. மாநில நலன்கள் பறிக்கப்படுவதை கண்டிக்க தயாராக இல்லை. அச்சப்படுகிறார்கள். ஆனால் இப்போது உள்ள அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *