“இன்னொரு மொழிப்போருக்கு தயாராகுங்க” – உசுப்பேற்றும் ராமதாஸ்!

Ramadas

— இராகவேந்திரன்

‘தமிழைத் தேடி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்., 21-ல் தொடங்கினார். திண்டுக்கல் வழியாக மதுரை வந்த அவரது 8ம் நாள் பயண நிறைவு நிகழ்ச்சி மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.

இதில் அவர் பங்கேற்று பேசியதாவது: தமிழைத்தேடி மதுரை மாநகருக்கு வந்த எனக்கு ஆதரவளித்து வாழ்த்திய பாலபிரஜாபதி உள்ளிட்டோருக்கு நன்றி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன். இங்கு தமிழன்னை இல்லை. எங்கும் தமிழன்னையும், தமிழையும் காணவில்லை. தமிழைத் தேடி என, சொல்வே வெட்கமாக உள்ளது. இந்நகரத்தில், தமிழ் புலவர்கள் வீட்டிலும் இல்லை. தொன்மை வரலாறு கொண்ட மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஆங்கில மோகம், தமிழ், ஆங்கில மொழிக்கலவை, மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்காமல் இருப்பது போன்ற காரணத்தால் தமிழ் அழிகிறது. ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தபட்ட நாட்களை தவிர, பிற நாடுகளில் தாய்மொழியில் பேசுகின்றனர். தமிழகத்தில் மட்டும்தான் தமிழ்மொழி அழிக்கப்படுகிறது. தாய் மொழியை தவிர்த்து, பிற மொழியில் பேசுபவர்களை காந்தி கூறியது போன்று பேடிகளாகவே இருப்பர்.

பிரதமர் மோடி கூட, தனது சொந்த மாநிலத்தில் பேசும்போது, தாய் மொழியிலயே பேசுகிறார். தமிழை வளர்க்க, தமிழையே அரசியலாக்க வேண்டியுள்ளது. தமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும். விரைவில் கையில் ஏணியும், கையில் வாளியுடனும் கருப்பு மை பூசும் போராட்டத்தை தொடங்குவோம்.

எந்த மொழிக்கும் எதிராக இதை முன்னெடுக்கவில்லை. இதனை எதிர்த்து யாரும் வழக்கு தொடரக்கூடாது. எச்சரிக்கின்றோம். பள்ளிக்களை கட்டி ஆங்கிலம் வளர்ப்பதை விட, பொறிகடலை விற்கலாம். தமிழ் அன்னையை பார்க்க முடியவில்லை. யாராவது கண்டுபிடித்தால் எனது தலையை அடகு வைத்தாவது ரூ.5 கோடி தருகிறேன். இப்பரப்புரை பயணத்திற்கு அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கூட்டத்தில் அழியும் நிலையிலுள்ள தமிழைக்காக்க பொழிப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும், பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழை கட்டாயம் பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்றவேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்பு வரை நீடிக்கவேண்டும், தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கவேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல் வேண்டும், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கவேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பிற மொழி கலப்பின்றி உரையாட தமிழ் மக்கள் உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *