தர்ணாவில் ஓபிஎஸ்… அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

OPS

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் பூட்டிய வருவாய்த்துறையினர், நுழைவாயில் அறையை பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தார். காலை முதலே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலையில் படுத்தும், தலைமை அலுவகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.

இதனிடையே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு அதிமுக பொதுக்குழு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அவர்,தான் அங்கம்வகித்த கட்சியைப் பற்றி குறைசொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், கட்சியின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்படுவதாகவும்,கட்சி விதி எண் 35-இன் படி நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தலைமை அலுவலகத்தில் நிலை கட்டுக்கடங்காமல் சென்றது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஓ பன்னீர்செல்வத்தை தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அலுவலகத்தை விட்டு தனது ஆதரவாளர்களுடன் வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் விதமாகவும், அதிமுக அலுவலகத்திற்குள் வேறு யாரும் நுழைவதை தடை விதிக்கும் விதமாக வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தின் அனைத்து அறைகளையும் மூடிய வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, நுழைவாயில் கதவையும் பூட்டி சீல் வைத்தார். போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், யாரும் உள்ளே நுழையக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடனும் கூடிய நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *