தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித்தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை போக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு போட்டித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதே பிழையான முடிவு. 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பாமக. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித்தேர்வை திணித்தது. ஆனால், 2013-14-ம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், போட்டித்தேர்வுகள் ஒருமுறை கூட தமிழகத்தில் நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது இதுவரையில் நடத்தப்படாத போட்டித் தேர்வுகளை இனியும் நடத்தாமல் இருப்பதே சமூகநீதி. 2018-ம் ஆண்டில் போட்டித்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதை இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்த்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் போட்டித்தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல், தற்காலிக நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், அந்த இரு வாக்குறுதிகளையும் மீறுவது நியாயமல்ல. எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் பணி இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல், ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *