வங்கியில் கடன் வாங்கி தருவதாக அரசு ஊழியரிடம் 25 லட்சத்தை ஆட்டயப்போட்ட பெண் வழக்கறிஞர் கைது

தேனியில் எஸ்டேட் நிலம் வாங்க வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி செபி உதவி பொது மேலாளரிடம் ரூ. 24.90லட்சம் பண மோசடி செய்த பெண் வழக்கறிஞர் கைது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை. 

சென்னை மடிப்பாக்கம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பகவதிராஜா.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிப்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பகவதி ராஜா, மும்பையில் உள்ள செபி (SEBI) அமைப்பில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கேரளாவில் சொந்தமாக எஸ்டேட் வாங்குவதற்காக தனது கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டில் தகவல் கேட்டுள்ளார். 

பின்னர் அவர் மூலம்  கேரளாவைச் சேர்ந்த நில புரோக்கர் சுரேஷ் என்பவர் அறிமுகமாகி , இடுக்கி மாவட்டம் புத்தடியில் அமல் வர்க்கீஸ், அலன் வர்க்கீஸ் ஆகியோர்களுக்குச் சொந்தமான எஸ்டேட்டை 2 கோடி ரூபாய்க்கு விலை  பேசி முன் பணமாக  92லட்சம் ரூபாய் கொடுத்து கிரய ஒப்பந்தம் செய்துள்ளனர். 

எஞ்சிய பணம் ரூபாய் 1 கோடியே 8 லட்சத்தை வங்கியில் கடனாக  பெறுவதற்கு நில புரோக்கர் சுரேஷ் மூலமாக தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்ரா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் அறிமுகமாகினர். பகவதி ராஜாவை தொடர்பு கொண்ட சித்ரா – மோகன் தம்பதியர், தங்களுக்கு பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், ஆடிட்டர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் பலரை தெரியும் என்றும் பணம் கொடுத்தால் உடனடியாக கடன் பெற்று விடலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். அதனை நம்பிய பகவதி ராஜா, பல்வேறு தவணைகளில் 24லட்சத்து 90ஆயிரம் ரூபாய் வரையில் ரொக்கமாகவும், சித்ரா தெரிவித்த வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளார். 

ஆனால் பேசியபடி வங்கியில் கடன் பெற்றுத் தராமல் சித்ரா – மோகன் தம்பதியர் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர் . இதனால் கேரளாவில் எஸ்டேட் வாங்கலாம் என்ற திட்டத்தை கைவிட்ட பகவதி ராஜா அதற்காக கொடுத்த முன் பணத்தையும் திரும்பப் பெற்றுள்ளார். இருந்த போதிலும் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் பறித்த 24லட்சத்து 90ஆயிரம் பணத்தையும், அதற்காக பெற்ற ஆவணங்களை திரும்ப தருமாறு சித்ரா – மோகன் தம்பதியரிடம், பகவதி ராஜா பல முறை கேட்டு வந்துள்ளார்.  

அதனை தர மறுத்ததால் பாதிக்கப்பட்ட பகவதி ராஜா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரேவிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வழக்கறிஞர் சித்ரா அவரது கணவர் மோகன் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பகவதி ராஜா போல மேலும் 5 நபர்களிடம் வங்கிகளில் கடன் பெற்று தருவதாக சித்ரா – மோகன் தம்பதியர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் வழக்கறிஞர் சித்ராவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது தொடர்பான மேல் விசாரணையிலும் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு பெண் வழக்கறிஞர் கைதான சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *