இன்டாஸ்கிராம் காதலிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் தங்க நகைகளை திருடிய இளைஞர் கைது.

11 சவரன் தங்க நகைகள் 250 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல். பக்கத்து வீட்டில் திருடிய நபரை காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா. திருட்டில் ஈடுபட்ட சித்தேரியைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமாரை (19) கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். வேலூரில் இன்டாஸ்கிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார்(34). திருமணத்திற்கு தாம்பூல பை தயாரிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி மகா சிவராத்திரி அன்று, நரேஷ்குமார் குடும்பத்தினருடன், வீட்டை பூட்டிவிட்டு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். 

மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து நரேஷ்குமார் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில், எஸ்ஐ ரேகா மற்றும் போலீசார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார்(19), என்பதும், நரேஷ்குமார் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 11 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அர்ஜூன் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட அர்ஜூன் ராஜ்குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய கோவையை சேர்ந்த பெண் தோழியை பார்க்க செல்ல முடிவு செய்துள்ளார். 

அந்த பெண் தோழிக்கு பரிசளிக்க அர்ஜூன் ராஜ்குமார் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்தது’ என்றனர். இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டிலேயே கைவரிசை காட்டிய இளைஞர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *