கோடு போட்ட அமித்ஷா!ரோடு போட்ட எடப்பாடி!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது என்பதை பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில், இதே கருத்தை நேற்றைய தினம் எடப்பாடியும் தெரிவித்துள்ளார். இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணி இடையே சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், இரு கட்சி தலைமைகளிடம் அதிருப்திகள் நிலவுவதாக தெரிகிறது. அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி தேவையற்றது… தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்..

அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார்.. இதையடுத்து, டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை.. ஆனால், அவரது கருத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.. இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் ஒரு தனியார் டிவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி தந்துள்ளார்.அதில், “தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.. இதையடுத்து, அதிமுக – பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது.. ஆனால், வெறும் கூட்டணியை மட்டும் மையப்படுத்தி பேசவில்லை, அதன் கணக்கே வேறு என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.

அதாவது, விரைவில் கர்நாடக தேர்தல் வரப்போகிறது.. தென் மாநிலங்களிலேயே, பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான்… கடந்தமுறை தேர்தலின்போதே பாஜக நிறைய விமர்சனத்துக்கு ஆளாகியிருந்ததால், இந்த முறை பாஜகவின் செயல்பாடுகள் பலராலும் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது. அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.. ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, என பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..

அதற்கேற்றவாறு, கர்நாடகா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது… அதேபோல, சிவோட்டர் கருத்து கணிப்புப்படி, கணிப்புகளில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இப்போதைய பாஜக ஆட்சியை விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். பாஜக மீதான அதிருப்திகள் இப்படி வெளிப்பட்டு வரும்நிலையில்தான், பலதரப்பு ஆதரவை நாட வேண்டி உள்ளது.. தேர்தல் நடக்க போகும் கர்நாடகா மாநிலத்தில், திமுக, அதிமுகவிற்கு வாக்கு வங்கி ஓரளவு இருக்கவே செய்கிறது.. அந்த வகையில், அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது.. திமுகவின் ஆதரவை காங்கிரஸ் பெற முயல்வதுபோல், அதிமுகவின் ஆதரவை பாஜகவும் பெற முயல்வதாக தெரிகிறது.

இதை மனதில்வைத்துதான், அதிமுகவுடனான கூட்டணியை அமித்ஷா உறுதி செய்திருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பாஜகவை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலைமையில் உள்ளார்.. பொதுச்செயலாளர் பதவியை அடைந்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் முடிவு என்ன என்று தெரியவில்லை.. திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட விதிகளுக்கு, இதுவரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்ததில்லை.. அப்படிஇருக்கும்போது, திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? என்று சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது..

எப்படி பார்த்தாலும் பாஜகவின் தயவு எடப்பாடிக்கும் தேவையாக இருப்பதாகவே தெரிகிறது.. இதை மனதில்வைத்துதான், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. சட்டசபை வளாகத்தில், செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே? என்று கேட்டதற்கு, இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்..இதற்கிடையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், “தெளிவுதேவை. அமித்ஷா சொல்கிற அதிமுக. கூட்டணி.. அபகரிப்பு பழனிச்சாமியின் டெண்டர் அண்ணா திமுகவா..? இல்லை எங்கள் ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அண்ணா திமுகவா? என்பதை தெளிவுபடுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும் என்கிறார்… மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை அங்கீகரிப்பதும், அபகரிப்பு எடப்பாடியை ஆதரிப்பதும் ஒன்றுதான் என்பதை தேசபக்தி பேசும் கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மருது.அழகுராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *