அதிமுகவின் அரசியல் எதிர்காலம் என்னாகும்? ஆதனூர் சோழன்

அதிமுகவுக்கு தலைமை தாங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியில்லை…

அதிமுகவை அழித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

அதிமுக ஒன்று சேர்ந்திருந்தால் திமுகவைத் தோற்கடித்திருக்கலாம்…

இரட்டை இலைச் சின்னம் கிடைத்தும் அதிமுக தோற்றுவிட்டது… இனி அதிமுக அவ்வளவுதான்…

அதிமுகவை பாஜக விழுங்கப்போகிறது… அதிமுகவினர் இனி பாஜகவில் அடைக்கலம் புகுந்து விடுவார்கள்…

இப்படியெல்லாம் பலவிதமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த கால தேர்தல் முடிவுகளை கணக்கிடாமல் இப்படிப் பேசுகிறார்கள் என்பதுதான் எனது கருத்து.

திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்பது உண்மைதான். மிகப்பெரிய வெற்றியை பெறறிருக்கிறது. பிரமாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. எல்லாம் உண்மைதான்.

ஈரோடு கிழக்கு தொகுதி என்பது அதிமுகவுக்கு செல்வாக்கான தொகுதி. அந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியிருக்கிறது என்பது பெரிய விஷயம்தான்.

ஆனால், இந்த வெற்றி எளிதாக கிடைத்ததா? என்பதுதான் முக்கியமான கேள்வி. தேர்தல் வெற்றிக்காக இதற்குமுன் ஆளுங்கட்சிகள் என்னவெல்லாம் செய்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.

முழுக்க முழுக்க அதிமுகவுக்கு செல்வாக்கான தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 906 வாக்குகளை பெற்றி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றிருக்கிறார்.

2021 தேர்தலைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு வாக்குகளை திமுக பெற்றிருக்கிறது. வித்தியாசமும் மிக அதிகம்.

பொதுவாக கடந்த 2021 பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் 1லட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக அணி 67 ஆயிரத்து 300 வாக்குகளையும் அதிமுக அணி 58 ஆயிரத்து 396 வாக்குகளையும் பெற்றிருந்தது.

ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தால், கடந்த தேர்தலைக் காட்டிலும் 14 ஆயிரத்து 473 வாக்குகள் மட்டுமே அதிமுக குறைவாக பெற்றிருக்கிறது. இது அப்படி ஒன்றும் கேவலமான தோல்வி அல்ல என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

கடந்த தேர்தலைக்காட்டிலும் கூடுதலாக பதிவான வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக போயிருக்கிறது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். வாக்குச் சதவீதம்கூட கடந்த தேர்தலைக் காட்டிலும் 13 சதவீதம்தான் குறைவு.

தோல்வி தோல்விதான் என்று எடுத்துக்கொண்டாலும், இதற்குமுன் இடைத்தேர்தல்களிலும், பொதுத்தேர்தல்களிலும் திமுக தோற்றதில்லையா? மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லையா?

அதிமுக மூன்றாய் நான்காய் சிதறி சின்னத்துக்காக போராடிஎடப்பாடி பழனிச்சாமி கட்சியைக் கைப்பற்றியதே பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அவருடைய தலைமையில் முதன்முதலில் சந்தித்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்பதே பெரிய விஷயம்தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

திமுக அதிமுக கதை இருக்கட்டும். ஆளுங்கட்சியின் அதிகாரக் குவியலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியும், தேமுதிகவும் கூட கடந்த தேர்தலைக்காட்டிலும் மோசமான வாக்குகளை பெறவில்லை. சொல்லப்போனால் தேமுதிக கடந்த தேர்தலைக் காட்டிலும் 200 வாக்குகள் அதிகமாகவே பெற்றிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியோ கடந்த தேர்தலைக் காட்டிலும் 800 வாக்குகள்தான் குறைவாக பெற்றிருக்கிறது.

பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், யாரும் பெரிய அளவில் தங்கள் வாக்கு வங்கியை இழந்துவிடவில்லை என்றே பார்க்க வேண்டும்.

அது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்பது புரிகிறது. கடந்த தேர்தலைக் காட்டிலும் நாங்கள் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் என்று திமுக அணி கூறினால், கடந்த தேர்தலைக் காட்டிலும் எங்கள் வாக்கு பெரிய அளவில் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் கணக்குக் காட்டத்தானே செய்யும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக என்ற கட்சியின் இருப்பு அவசியம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவினர் அனைவருமே செமி சனாதனப் பேர்வழிகள்தான். எடப்பாடியோ, பன்னீரோ, தினகரனோ, சசிகலாவோ எல்ோருமே ஊழல் சொத்துக்களை பாதுகாக்கவும், கிரிமினல் வழக்குகளில் இருந்து தப்பவும் மத்திய அரசுக்கு பயந்து நடுங்கும் கோழைகள்தான்.

இருந்தாலும் பாஜக என்ற விஷப்பாம்பு தமிழக அரசியலில் தலையெடுக்காமல் பாதுகாக்க அதிமுக அவசியம். அதற்காக அதிமுக உயிரோடு இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *