பீட்சா டெலிவரி பாயாக வலம் வரும் முன்னாள் அமைச்சர்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் சையத் அஹ்மத் சதாத்.
தற்போது அவர் ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் பாயாக சைக்கிளில் வலம் வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2018 இல் சதாத் ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால் அஸ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனி சென்றடைந்த சதாத், லீப்ஜிக்கில் வசிக்கிறார்.
ஜெர்மனி சென்ற சதாத், தன்னிடம் இருந்த பணம் தீர்ந்த பிறகு ஜெர்மன் நிறுவனமான லிவ்ராண்டோவில் உணவு விநியோகம் செய்யும் நபராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்டிருந்த சதாத் இப்போது சைக்கிளில் பீட்சா வழங்குகிறார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஆப்கன் நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தற்போது பீட்சா டெலிவரி செய்யும் பாயாக வேலை செய்வது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சரின் இந்த பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.