இளவரசர்களின் சண்டை… உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

ஒபெக்+ எனப்படும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் ரஷ்யா போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் தலைமை நாடுகளாக உள்ள சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம் எனக் கடந்த வாரம் கூறியது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்+ அமைப்பின் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவில் இருந்து முரண்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தன் நாட்டின் கோட்டா அளவை மாற்ற முயற்சிக்கிறது. அந்தக் கோட்டாவின் அடிப்படையில் தான் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கூட்டுவது குறைப்பது எல்லாம் நடைபெறும்.
இதனால், ஓபெக் அமைப்பின் பேச்சுவார்த்தைகளை கால வரையின்றி ஒத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளைப் பொது வெளியில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
செளதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் மற்றும் அபுதாபியின் இளவரசர் மொஹம்மத் பின் சயீத் என்ற இருவருமே இன்னும் அரசராக பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள்.
இந்த இரு இளவரசர்களின் கருத்து வேறுபாட்டால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.