ஒரு கிலோ வாழைப்பழம் 3000 ரூபாயா! வடகொரியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் ராணுவம், பொருளாதாரம், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ரகசியமாகவே வைத்திருப்பார்.
இந்நிலையில், வடகொரியாவில் உணவுப்பஞ்சம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. வழக்கம் போல் இந்த விஷயமும் ரகசியமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதன்முறையாக உணவுப்பஞ்சத்தை அதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
வடகொரியா உணவு, உரம், எரிபொருட்களுக்கு சீனாவையே சார்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து சீனாவின் எல்லைகளை வடகொரியா முற்றிலும் மூடியது.
இதனால், தான் போதிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது, வடகொரியாவில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை இந்திய மதிப்பில் 3300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்” என எச்சரித்து கவலை தெரிவித்துள்ளது.