60 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதி!
சவுதி அரேபியாவில் உள்ள
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் இந்த ஆண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 ஆயிரம் பேர் மட்டுமே புனித ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்த அனுமதி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.