வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மரண தண்டனை…எந்த நாட்டில் தெரியுமா?
திரைப்படம் பார்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். தற்போது பெருகி வரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் மற்ற நாட்டின் திரைப்படங்களை அவர்களது சொந்த மொழியில் பார்த்து ரசிக்கலாம்.
ஆனால், வடகொரியாவில் அந்த நாட்டு திரைப்படங்களைத் தவிர மற்ற நாட்டு திரைப்படங்களை பார்த்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், வேறு நாட்டு திரைப்படங்களின் சிடி-க்களை சீன எல்லை வழியாக திருட்டுத்தனமாக எடுத்து வந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய மக்கள் அந்த நாட்டு திரைப்படங்களைத் தவிர வேறு நாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரிய அரசுக்கு எதிராக கேள்வி கேட்பார்கள். இதனை, கிம் ஜாங் உன் அரசு விரும்பவில்லை.
கிம் அரசு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவதை விரும்பவில்லை. கொரோனா பரவலில் கூட வடகொரிய அரசு அந்நாட்டு மக்களின் நிலை குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு தெரிவிக்கவில்லை.
வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து சிந்திக்காமல், மற்ற நாட்டு திரைப்படங்களைப் பார்த்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அரசின் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களை உலக நாடுகள் பரிதாபமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சர்வாதிகார அரசின் பிடியிலிருந்து வடகொரியா எப்போது மீளப் போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.