சீனாவின் ’கொரோனாவேக்’ தடுப்பூசிக்கு அவ்வளவு பவரா? நிரூபித்துக் காட்டிய பிரேசில்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், பிரேசிலில் இதுவரை 4.6 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கும் நிலையில், நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனால், கொரோனாவுக்கு எதிரான பிரேசிலின் பிரதமர் போல்சனாரோவின் செயல்பாடு திருப்திகரமானதாக இல்லை என மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தென்கிழக்கு பிரேசிலில் செரானா என்ற நகரத்தில் வாழும் 45 ஆயிரம் மக்களுக்கு சோதனை முயற்சியாக சீனாவின் கொரோனாவேக் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி முதல் ஏப்ரலுக்கு இடைப்பட்ட மாதங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கையும், மரணமும் மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது என சினோவாக் என்ற சீன நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருக்கும், சாவோ பாலோவில் அமைந்துள்ள தி புடான்டன் இன்ஸ்டிட்யூட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவேக் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அறிகுறிகள் கொண்ட தொற்றுகளின் எண்ணிக்கை 80 சதவிகிதம் வரையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் 86 சதவிகிதம் வரையிலும் குறைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.