வங்கதேசத்தில் மோடிக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பலி!
1917 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்தது. வங்கதேசம் தனி நாடாக உருவெடுத்ததில் இந்தியாவிற்கு அதிக பங்கு உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தின் சுதந்திர பொன்விழா இன்று தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொன்விழா கொண்டாடத்தில் பங்கேற்க, இந்திய பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷே க் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு சென்றிருக்கிறார்.
வங்கதேசத்துக்கு வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில், பாஜக சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வருவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் காவல்துறையினர் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.
சட்டோகிராமில் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க முயன்றபோது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே மோதல் வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.