ஒரு பெரிய மனுசன் செய்ற வேலையா இது? தொடரும் தாய்லாந்து பிரதமரின் சேட்டைகள்!

அமைச்சரவை பற்றி கேட்டதில் ஆத்திரமடைந்த தாய்லாந்து பிரதமர் பத்திரிகையாளர்கள் மேல் கிருமி நாசினியை தெளித்த சம்பவம் அங்கு கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

2014-ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் போது கிளர்ச்சியை தூண்டியதாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவயை சேர்ந்த 3 மந்திரிகள் மீது அப்போது வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த தாய்லாந்து நீதிமன்றம் அமைச்சர்கள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவையில் 3 துறைகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் சான் ஓச்சாவிடம் காலியாக உள்ள அமைச்சரவை இடங்கள் எப்போதும் நிரப்பப்படும் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரயுத் சான் ஓச்சா ”வேறு ஏதாவது இருக்கிறதா கேட்க? எனக்குத் தெரியாது. நான் அதை இன்னும் பார்க்கவில்லை. இது பிரதமர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?” என கோபத்துடன் கூறினார். பின்னர் கிருமிநாசினி பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் அருகில் சென்ற அவர் ஒவ்வொருவர் மீதும் கிருமிநாசினியை ‘ஸ்ப்ரே’ செய்தார்.


பத்திரிகையாளர்களிடம் பிரதமர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனினும் பிரயுத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களிடம் இப்படி கரடுமுரடாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல.‌ பதிலளிக்க முடியாத வகையில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை தலையில் தட்டுவது, காதை பிடித்து இழுப்பது, அதுமட்டுமின்றி ஒருமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது கட்அவுட்டை வைத்து விட்டு வெளியேறியது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *