குழந்தைகளுக்கு பதிலாக எனது உயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் – ராணுவத்திடம் மன்றாடும் கன்னியாஸ்திரி!
மியான்மர் நாட்டில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த போராட்டம் தற்போது வன்முறைப் போராட்டமாக மாறி 50 உயிர்களை பலி வாங்கியுள்ளது.
இந்நிலையில் மியான்மரில் நடக்கும் சில வன்முறை செயல்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதை காண்போரை பதறவைக்கும் காட்சிகள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் மண்டியிட்டு ராணுவ வீரர்களிடம் கோரிக்கை வைக்கும் புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 45 வயதான கன்னியாஸ்திரி ஆன் ரோஸ், குழந்தைகளை ராணுவம் தாக்கக் கூடாது என்று மண்டியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். இவரது இந்த புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது.
குழந்தைகளுக்கு பதிலாக வேண்டுமானால் எனது உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. ராணுவத்தினரின் அத்துமீறலால் மியான்மரில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது மனித உரிமை மீறல் எனக் கூறப்படும் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு வன்முறையை தடுக்கவேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.