நாங்க அதிசயம் நிகழ்த்திட்டோம் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு!
சீனாவில் ஐ.நா. நிர்ணயித்த காலெக்கெடுவுக்கு முன்னதாகவே வறுமையை ஒழித்துவிட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் முழுமையான வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் மற்றும் அதன் வறுமையை ஒழிக்க போராடியவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் கூறுகையில், சீனாவில் வறுமையை ஒழிக்க கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் கிராமப்புறங்களில் அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் 770 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். வறுமையில் இருந்த 832 மாவட்டங்களும், 128,000 கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா ஒரு “முழுமையான வெற்றியை” அடைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. நிர்ணயித்த காலெக்கெடுவை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டிவிட்டோம் என்றும் சீன அரசியல் வரலாற்றில் புது சரித்திரம் படைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
இதே காலகட்டத்தில் உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்காக 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா வழங்கியுள்ளது என்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜி கூறினார்.
இத்தகைய சாதனைகள் மூலம், சீனா மற்றொரு “அதிசயத்தை” உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் வறுமை ஒழிப்புக்காக சீனா கிட்டத்தட்ட 1.6 டிரில்லியன் யுவான் (சுமார் 246 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை முதலீடு செய்துள்ளதாக ஜி கூறினார்.
உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோட்டின் படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று ஜி கூறினார்.