இந்து கடவுள்களை அவமதித்து ட்விட்; எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் எம்.பி

பாகிஸ்தானில் ஆளும் தெரிக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான் கான் பிரதமராக பதவி வகிக்கிறார். இவருடைய கட்சி எம்.பி. அமிர் லியாகத் உசைன். இவர் சில நாட்களுக்கு முன்னர் இந்துக் கடவுளின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப்புடன் ஒப்பிட்டு கேலி செய்திருந்தார்.

இதற்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவர்களாக உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அமிர் லியாகத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து வேறு வழியின்றி இந்துக்களிடம் எம்.பி. அமிர் லியாகத் நேற்று மன்னிப்பு கோரினார். அத்துடன், ட்விட்டர் பதிவையும் உடனடியாக அவர் அகற்றினார். இதுகுறித்து அமிர் லியாகத், ‘‘இந்துக்களின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டது எனக்கு தெரியும். அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். நான் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கிறேன். அதைத்தான் எனது மதமும் கற்றுத் தந்துள்ளது’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *