நீங்க வீட்லயே இருங்க… நாங்க ரூ. 15 லட்சம் தர்றோம்… – அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு!

குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள், வயதான குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவித்துள்ளது அமெரிக்கா. கடந்த வாரம் இதற்கான மசோதாவை பைடன் அரசு வெளியிட்டது. அரசு ஊழியர்களுக்கான அவசரகால விடுப்பு நிதி என அதில் ரூ.4,128 கோடிக்கு மேல் அறிவித்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் மத்திய அரசின் பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30 வரை சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும். இம்மசோதாவின் படி முழு நேர அரசு ஊழியர்கள், 600 மணி நேர விடுப்பு எடுக்கலாம். அவர்களுக்கு மணிக்கு 35 டாலர்களும், வாரத்திற்கு 1400 டாலர்கள் வரையும் சம்பளம் வழங்கப்படும்.

அதன்படி அமெரிக்காவின் ஒரு மத்திய அரசு ஊழியர் 15 லட்ச ரூபாய் வரை பெறுவார். மேலும் கொரோனா காரணமாக வீட்டிலுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்களுக்கும் இதே போல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். பகுதிநேர ஊழியர்களுக்கும் அவர்கள் பணி நேரத்துக்கு இணையான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *