சடலத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய அதிகாரிகள்

ஈரானைச் சேர்ந்த ஜஹாரா இஸ்மையிலி என்ற பெண், தன்னையும் தனது மகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த கணவரை கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்நாட்டு வழக்கப்படி கொலை குற்றத்திற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றுவதற்காக அவர் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே ஜஹாராவுக்கு முன்னதாக 16 குற்றவாளிகள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இறப்பதை கண்ணால் பார்க்க வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட ஆணையில் ஒன்று.

மற்ற குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டு துடிதுடித்து இறப்பதை கண்ட ஜஹாரா, அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜஹாராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஈரான் நாட்டு சட்டப்படி அங்கு கொலை குற்றம் நிறைவேற்றுவதற்கு சில முறைகள் உண்டு.

கொலை குற்றவாளி தூக்கு மேடையில் இருக்கும் போது, அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியை  புகார் கூறியவர் எட்டி உதைக்க வேண்டும். அதை தொடர்ந்து, குற்றவாளி தூக்கில் தொங்கியபடி மரணம் அடைவார். இப்படி செய்வதால் குற்றம்சாட்டப்பட்டவர் மீது புகார் கூறியவருக்கு அமைதி கிடைக்கும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே ஜஹாரா இறந்துவிட்டதால், அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும், அவருடைய உயிரற்ற உடலை தூக்கில் மாட்டிய அதிகாரிகள், அவருடைய மாமியாரை கொண்டு நாற்காலியை எட்டி உதைக்கச் செய்தனர். இதன்மூலம் ஜஹாராவின் சடலத்துக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண்ணின் உயிரற்ற உடலை தூக்கில் தொங்கச் செய்த ஈரான் அரசு மீது மனித ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *