ஹாரி-மேகன் பேட்டியால் அதிருப்தியில் ராணி எலிசபெத்
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கல் தம்பதி, கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றனர். அமெரிக்காவில் குடியேறிய இவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதாக முடிவெடுத்தனர். இதனை அடுத்து பிரிட்டன் ராணுவத்தின் உயரிய பதவிகளில் இருந்து ஹாரி நீக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை முன்னதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ராணி இரண்டாம் எலிசபெத் இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், வரும் மார்ச் 7-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகளைத் துவக்க ராணி இரண்டாம் எலிசபெத் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். இதற்காக பிபிசி தொலைக்காட்சிக்கு எலிசபெத் பேட்டி அளிக்க உள்ளார். மார்ச் 8-ஆம் தேதி காமன்வெல்த் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தினத்தில் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச குடும்பத்திலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்று ஹரி மற்றும் மேகன் தம்பதி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவிடம் அளித்த பேட்டி அதே சமயத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
இதனால், ஹாரியின் பேட்டிக்கு இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவல் எழுந்துள்ளது. இவர்களது பேட்டி ராணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் தாங்கள் இந்தப் பேட்டியை அளிக்கவில்லை என ஹாரி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.