இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் ஈரான்
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு மட்டும் யுரேனியத்தைச் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிகா இணைய தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “எங்கள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அணுசக்தி திறன்களைப் பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே ஈரானின் செறிவூட்டலுக்கான உச்ச வரம்பு 20% ஆக இருக்காது. சொல்லப்போனால் ஈரானின் அணுசக்திக்குத் தேவை ஏற்பட்டால் யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாகக் கூட இருக்கலாம். நாங்கள் அணு ஆயுதங்களைப் பெறவேண்டும் என்று நினைத்தால் அதனை இஸ்ரேல் மற்றும் அதனை வேறு எந்த நாட்டாலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.