பாகிஸ்தான்: கொரோனாவால் உயிரிழந்த அரிய வகை வெள்ளை புலிக்குட்டிகள்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில், 11 வார வெள்ளை புலி குட்டிகள் இரண்டிற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சையை தொடங்கிய 4வது நாளில், இரண்டு குட்டிகளும் உயிரிழந்தன. ’feline panleukopenia’ என்ற ஒருவகை வைரஸ் பாதிப்பின் காரணமாக குட்டிகள் உயிரிழந்திருக்கலாம் என மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் கருதினர். இது போன்ற விலங்கினங்களில் இந்த வகை வைரஸ் பாதிப்பு என்பது வழக்கமான ஒன்று.

ஆனால், உடற்கூராய்வு அறிக்கையில், இரண்டு வெள்ளைப் புலிக் குட்டிகளின் நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், புலிகுட்டிகளின் இறப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தது.
இதனால், மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் ஒருவர் இறந்து போன இரண்டு புலி குட்டிகளையும் பராமரித்து வந்துள்ளார். இது, புலிக்குட்டிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விலங்குகளை பராமரிப்பவர்களிடம் இருந்து வெள்ளை புலி குட்டிகளுக்கு தொற்று பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. லாகூர் மிருகக் காட்சி சாலையில் மிகவும் அரிதான இரண்டு வெள்ளை புலிக்குட்டிகள் ஏற்கனவே மரணமடைந்துள்ளன. தற்போது மேலும் இரண்டு புலி குட்டிகள் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.