தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை
இலங்கையில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானில ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ’இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.