2 மாறுபட்ட தீர்ப்புகள்- 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு தந்துள்ளார்.அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு தந்துள்ளார். மாறுபட்ட தீர்ப்புகள் வந்துள்ள நிலையில், 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர்… அவரின் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை” என்று தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு கடந்த மாதம் 27ம் தேதி, நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது.. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, “கைதுக்கான காரணங்களை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட கைது மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என சொல்ல எவ்வித ஆதாரமும் இல்லை. இதன் மூலம் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரியவருகிறது.. ஆனாலும் இதை எதையும் கணக்கில் எடுக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது” என வாதிட்டார். இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.. அப்போது, உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 வருட ஜெயில் தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்பதால்தான், கைது செய்யப்பட்டார்.

மற்றபடி, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. எனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது.. அதேபோல், நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என்று சொல்ல முடியாது ” என்று வாதிட்டார்.மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாள்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களையும் முன்வைத்திருந்தார். தீர்ப்பு: 2 தரப்பிலும் இப்படி பரபரப்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின்மீது இன்று காலை சென்னை ஹைகோர்ட்டில் தீர்ப்பளித்தது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு தந்துள்ளார். அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு தந்துள்ளார். மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதிக்கு வழக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *