அயல் திரை கதையோரம் – கணேசகுமாரன்

இந்த வாரம் மலையாள திரைப்படமான ரோமாஞ்சம் குறித்து சம்சாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷோபின் ஷாகிர் மூலம் ப்ளாஷ்பேக்கில் விரியும் கதை. அவர் ஏன் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தார் என்பதை க்ளைமாக்ஸ் வரை சொல்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஏழு நண்பர்கள் குடியிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஏழு பேரின் பின்னணியும் சின்னச் சின்ன காட்சிகளில் காட்டப்படுகிறது. ஏனோதானோ அறிமுகம் இல்லாமல் சுவாரசியமான பின்னணியில் காட்டப்படும் காட்சிகளில் முதன்மை நகைச்சுவை. அதுவும் திணிக்கப்படாமல் இயல்பாகவே. ஹான்ஸ் போடும் கதாபாத்திரமெல்லாம் ஆரம்பத்திலேயே பிடித்துவிடுகிறது. அதுவும் அவர் பெயர் முகேஷ் என்பதெல்லாம் இயக்குநரின் அக்மார்க் குறும்பு. பேச்சுலர்ஸ் வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் வாய்கொள்ளா சிரிப்புடன் திரையில் விரிய நல்லதொரு காமெடி அனுபவத்துக்குத் தயாராகிறோம்.

ஷோபின் ஷாகிருக்கு இன்னொரு நண்பர் மூலம் ஓஜா போர்டு என்ற அமானுஷ்ய விளையாட்டு அறிமுகமாகிறது. தன் வீட்டிலும் அந்த விளையாட்டை விளையாட நண்பர்களை அழைக்கிறார். தொடக்கத்தில் தன்னுடைய நண்பர்களை டீஸ் செய்து விளையாடும் ஷோபின் போகப்போக தன்னை மீறி நிஜமாகவே அங்கு அனாமிகா என்ற ஆவி இருப்பதை உணர்கிறார். அந்த ஆவி யார்? எதற்கு அங்கே இருக்கிறது? அது ஏன் ஷோபினை ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறது என்பதே மீதிப்படம். இப்படியெல்லாம் யோசித்த இயக்குநர் டிஸ்கஷனின் போதே எல்லா கேள்விக்கும் பதில் இரண்டாம் பாகத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டதால் இரண்டு மணி நேர அனுபவம் சுவாரசியமாக இருந்தும் லாஜிக் கேள்விகள் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

மற்ற எதுவும் யோசிக்க விடாமல் இரண்டு மணி நேரமும் சிரித்து பயந்து மீண்டும் சிரித்து நேரத்தை சிறப்பாகவே செலவழிக்க வைக்கிறது சினிமா. கதாபாத்திரங்களின் பங்களிப்பும் இசையும் வலிந்து எழுதப்படாமல் இயல்பாகவே ஹியூமர் பூசி பேசப்படும் வசனங்களும் பெரும் ப்ளஸ். புல்லரிப்பு என்பதுதான் சினிமா தலைப்பு. அதிகமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாக.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *