சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சட்டப்பேரவையில் தான் உரையாற்றிவிட்டு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அதன் காரணமாகவே, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதில் தொடங்கிய பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என அடுத்தடுத்து திமுக அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசுவதால் மோதல் முற்றியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டபையில் ஆளுநர் உரையாற்றும்போது திராவிட மாடல், பெரியார், அண்ணா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி =பேச மறுத்தார். இதன் காரணமாக ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து அதிரடி காட்டினார். இதையடுத்து, உடனடியாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சட்டமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில், ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ள ஆளுநர் ரவி, அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திமுக அரசு முன்வைத்து வரும் முழக்கமான திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்றும் கூறியுள்ளார்.இதன்காரணமாகவே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசித்ததாகக் கூறினார். தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *