கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் எப்போது? – இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29) வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌.

இருப்பினும் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி அங்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் அவரது பிறந்த நாளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி எடியூரப்பாவை வெகுவாகப் பாராட்டினார். மேலும் எடியூரப்பாவுக்கு பாஜகவின் பாராளுமன்ற குழுவிலும், தேர்தல் பிரச்சாரக் குழுவிலும் இடமளிக்கப்பட்டது.

இந்நிலையில் ம‌த்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அண்மையில் எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்தித்தார். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் சார்ந்த லிங்காயத்து வகுப்பினர் பாஜக மீது அதிருப்தி அடைந்தனர். மேலிடத்தின் மீது கோபமடைந்த எடியூரப்பாவும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஷிகாரிபுரா தொகுதியில் தனக்கு பதிலாக தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என தெரிவித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் மோடியும், அமித் ஷாவும் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அதிருப்தியில் உள்ள லிங்காயத்து வாக்கு வங்கிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *