திராவிட மாடல் ஆட்சி! ஈரோடு கிழக்கே சாட்சி! ராஜீவ் காந்தி பரபரப்பு டிவீட்!!

இராகவேந்திரன்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகத்தில் உள்ள நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பரபரப்பு டிவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை சீண்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் போராக வெடித்துள்ளது.

ராஜீவ்காந்தியின் டிவிட்டர் பதிவுக்கு அதிமுகவினரும், பாஜகவினரும் பதிலேதும் கொடுக்காத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக விமர்சித்து பதில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

“பெரியார் மண்! அடிமைகளையும், மதவாதிகளையும், குடிதேஷ் கோமாளிகளையும், விரட்டி அடித்து வீழ்த்தி இருக்கிறது. தலைவர் மு.க ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு ஈரோடு சாட்சி” என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதிமுகவை அடிமைகள் என்றும் பாஜகவை மதவாதிகள் என்றும் நாம் தமிழர் கட்சியினரை குடிதேஷ் கோமாளிகள் எனவும் ராஜீவ்காந்தி சூசகமாக குறிப்பிட்டிருப்பது வார்த்தைப் போராக வெடித்துள்ளது.

ராஜீவ்காந்தியின் பதிவுக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கினர். ராஜீவ்காந்தியை மனநோயாளி என்பன உள்ளிட்ட வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே அதிமுக, பாஜக தரப்பில் ராஜீவ்காந்தியின் டிவிட்டை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தியை பொறுத்தவரை ஊடக விவாதங்களின் போதும், சமூக வலைதளப் பதிவுகளின் போதும் அதிமுகவை சாடுகிறாரோ இல்லையோ பாஜகவையும், நாம் தமிழர் கட்சியையும் சாட தவறாதவர்

முதலமைச்சர் ஸ்டாலின் மீது சீமான் முன் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் ராஜீவ்காந்தி மூலம் திமுக பதிலடிகள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தி ஒரு காலத்தில் சீமானுடன் மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் என்பதும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் திமுகவில் இணைந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது பேச்சுத்திறனால் திமுகவில் மாணவரணி தலைவர் பதவியை பெற்றுள்ள இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.சீட்டையும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் எப்போதும் ஆக்டிவாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதில் ஆர்வமாக இருகிறார் ராஜீவ்காந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *