HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 47

எனக்கான ஒரு பாடல்

வேலை வேலை வேலை இந்த நோக்கம் மட்டும்தான் பணியிடத்தில் இருக்குமா, வேறெதுவும் கிடையாதா? வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினால் மனித மனம் என்னாவது, கொஞ்சமாவது இளைப்பாற வாய்ப்பில்லையா? அப்படியெல்லாம் இல்லை. மனித மனம் ஒரு எல்லைக்கு மேல், தொடர்ந்து செய்யும் பணிச் சூழலில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட சூழலுக்கு மாறினால்தான் சிறப்புடன் இயங்க முடியும். எந்திரத்திற்கே சில ஒய்வு கொடுத்தால்தான் பணியானது தங்கு தடையில்லாமல் செல்லும், அப்படியிருக்கும் போது, ரத்தமும், சதையும், உணர்வும் உள்ள மனிதர்கள் எம்மாத்திரம். அவர்களுக்கென்று சில அங்கீகாரம், அடையாளம், இளைப்பாறுதல் மற்றும் இன்னபிற இருக்கத்தான் வேண்டும். நாம் ஏற்கெனவே கூறியுள்ளது போல பணியாளர் ஈடுபாடு (Employee Engagement) என்ற நிகழ்வுக்குள் இவையனைத்தையும் மனித வளத்துறையில் உள்ளவர்கள் சிறப்பான திட்டமிடலோடு பணியாளர் நலன் சார்ந்து பல்வேறு நிகழ்வுகளை வடிவமைத்து செயல்படுத்தி ஒரு புது உத்வேகத்தை நிறுவனத்தில் ஏற்படுத்தும் ஓர் அற்புதமான நிகழ்வு. இதன்மூலம் ஒவ்வொரு பணியாளரின் பங்களிப்பும், தனிப்பட்ட திறனும், குழுவோடு இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு பிடிப்பும் ஏற்படும்.

அப்படிப்பார்க்கும் போது, நிறுவனத்தில் யாரெல்லாம் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளனரோ அவர்களுக்கு நீண்ட கால பணிக்கான விருது (Long Service award) கொடுத்து சிறப்பிப்பதுண்டு. இது பணியாளருக்கு நிறுவனம் செய்யவேண்டிய கடமை. தகுதியில்லாதவர்கள்தான் ஒரே இடத்தில் குப்பை கொட்டுவார்கள் எனும் மேம்போக்கான வசையாடல் உண்டு, எத்தனையோ இன்னல்களைத் தாண்டித்தான் இவை சாத்தியமானது என்பது அந்தப் பணியாளருக்கும், மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். மேலும் வேலையில் தனது சிறப்பான பங்களிப்பைத் தரும் பணியாளருக்கு விருது கொடுத்து சில பல சலுகைகளையும் கொடுத்து ஊக்குவிப்பது இன்னொரு வகை. விருது வாங்காதவர்களுக்கு காழ்ப்புணர்வு ஏற்படுமே? ஏற்படவேண்டும் என்பதற்காக இதைக் கொடுப்பது கிடையாது, மாறாக இந்த நிலைக்கு அவர்களும் வரவேண்டும் எனும் பெருவிருப்பதில்தான் இது வழங்கப்படுகிறது.  இதை எப்போது ஒருவர் எண்ண ஆரம்பிக்கிறாரோ அப்போதே அவரும் விருது பெரும் தகுதி எல்லைக்குள் வந்துவிட்டார். இப்படி சிறப்பான பணித்திறனை வெளிப்படுத்துபவரை மின்னும் (நட்சத்திர) பணியாளர் (Star Performer) என்று அழைப்பதுண்டு. இவை பெரும்பாலும் நான்கு வகைக்குள் அடங்கும், அவை…

  • வாடிக்கையாளர் பெருமிதம் அடையும் வகையில் சிறப்பான திறனைக் காட்டுதல் (Customer Satisfaction)
  • குறிப்பிட்ட தொகைக்குள் வேலையை கச்சிதமாக முடித்து செலவினம் குறைத்தல் (Cost Saving)
  • புதுப்புது சிந்தனைகள் மூலம் புதுவிதம் காட்டுதல் (Innovative Ideas)
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் அல்லது முன்கூட்டியே வேலையை செய்துமுடித்தல் (Service Beyond Delivery).

வேறென்ன செயல்களுக்கு எல்லாம் பணியாளர்கள் சிறப்பு செய்யப்படுவார்கள்? நிறைய உள்ளன, சிலவற்றை மட்டும்தான் இங்கு குறிப்பிடுகிறேன். எப்படியெல்லாம், எவ்வாறெல்லாம் பணியாளர்களை ஊக்கப்படுத்த முடியுமோ அதன் வழிகளை எல்லாம் ஆராய்ந்து செயல்படுத்தி நல்ல ஒரு பணிச்சூழலை உருவாக்குவது HRன் சிறப்பு செயல்பாடுகளுக்குள் அடங்கும். பணியாளரின் பதவி உயர்வு, சம்பள உயர்வு இதையெல்லாம் தாண்டி, அவர்களை உயிர்த்துடிப்போடு வைத்திருக்க இதுபோல சில செயல்பாடுகள் எல்லா நிறுவனங்களிலும் இருக்கும். அப்படி இருக்கும் நிறுவனக்களின் மீது பணியாளர்களுக்கு தன்னை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு ஏற்படும். அந்த ஈர்ப்பு இருவருக்கும் பயனளிக்கக்கூடியதாக இருந்தால் இன்னும் சிறப்பு. பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் பாலான நிறுவனமாக மாறி தங்களது வணிகத்தை இழந்ததற்கு இவைபோன்ற முறையான செயல்பாடுகள் இல்லாததே முதற்காரணமாக இருக்கும். சில நேரங்களில் மனிதவளத்துறையில் உள்ளவர்கள் இதைப்பற்றி எவ்வளவுதான் நிறுவன உரிமையாளருக்கு எடுத்துச் சொன்னாலும் இதன் மேன்மை புரிவதில்லை. சிக்கல் வரும் போது யாரோ முகம் தெரியாத ஒரு ஆலோசகரை (Consultant) அழைத்து அவர் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டும் நிலை ஏற்படும்.

எல்லா நிலையில் உள்ள பணியாளர்களும் ஈடுபாட்டோடு பங்கெடுக்கும் இன்னொரு நிகழ்வு பாரம்பரிய உடையணிதல் நிகழ்வுதான் (Ethnic Day) என்று சொல்லலாம். இது ஒரு மிகப்பெரிய பங்கெடுப்பை மட்டுமல்லாது ஒரு குதூகலத்தையும் ஏற்படுத்திவிடும். விட்டுப்போன உணர்வுகளை எல்லாம் தோண்டியெடுத்து, தூசிதட்டி மகிலூட்டும் நிகழ்வாக இருக்கும். பொங்கல் பண்டிகையை ஒட்டி இதை ஏற்பாடு செய்வதுண்டு. வேலைக்கு தினமும் சீருடையில் வந்த பணியாளர்கள் ஒரு நாள் இப்படி விதவிதமான உடையணிந்து வருவது அவர்களுக்கு உள்ளே ஓர் இனம் புரியா மகிழ்வை ஏற்படுத்தும். அன்றைய நாளே ஒரு விழாக்கோலம் தான், ஒற்றுமை உணர்வையும், குடும்ப உணர்வையும் இந்நிகழ்வின் போது ஆக்கப்பூர்வமாக கண்டடையலாம். அளவு கடந்த அன்பையும், அளவு கடக்காத கோபத்தையும் ஒருசேரக் காணலாம்.

மனைவி அதிகம் பேசுகிறாள் என்று கணவனும், கணவன் எதுவும் பேசுவதே இல்லை என்று மனைவியும் குறைபடும் காலச்சூழலில், பணியிடத்தில் உயர் நிலையில் இருக்கும் மேலாளரும் கடைநிலையில் இருக்கும் ஊழியரும் ஒருசேர மனம் விட்டுப்பேசும் அரிய நிகழ்வு இது. வேட்டியே கட்டத்தெரியாதவர் எல்லாம் அன்று ஒன்றிற்கு இரண்டு பெல்ட்டுகளை நம்பி வருவார்கள். ஏனென்றால் பலபேர் நம்மை வாருவதற்கென்றே காத்திருப்பார்கள். பெண்கள் பக்கம் கொஞ்சம் அலப்பறை அதிகமாகத்தான் இருக்கும். மொத்தத்தில் நிகழ்வுகள் அனைத்தும் நம்மை ஒருங்கிணைத்து, ஒன்றுசேர்த்து ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கிப் பயணிக்க என்பதை மனதில் எப்போதும் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். அன்பால் பண்பால் நாம் எதையும் சாதிக்கவும், வெல்லவும் முடியும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் (Employee Engagement) எல்லாம் உறுதுணையாக இருக்கும்.

எப்போதெல்லாம் உங்களுக்கு மனச்சோர்வும், தொய்வும் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கான ஒரு பாடலை பாடிக்கொண்டும், உங்களுக்கான ஒரு தேடலை தேடிக்கொண்டும் இருங்கள்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  1. ரெஜினா சந்திரா says:

    பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும் அடையாளமும் ஒரு வகை இளைப்பாறுதல் எனக் கூறியிருப்பது அருமை.

  2. DANIEL RAJANYAGAM says:

    Simply ?

  3. கோவி. சேகர் says:

    வாடிக்கையாளர் பெருமிதம் அடையும் வகையில் சிறப்பான திறனைக் காட்டுதல் (Customer Satisfaction)
    குறிப்பிட்ட தொகைக்குள் வேலையை கச்சிதமாக முடித்து செலவினம் குறைத்தல் (Cost Saving)
    புதுப்புது சிந்தனைகள் மூலம் புதுவிதம் காட்டுதல் (Innovative Ideas)
    குறிப்பிட்ட நேரத்திற்குள் அல்லது முன்கூட்டியே வேலையை செய்துமுடித்தல் (Service Beyond Delivery). சிறப்பான சிந்தனை. கூடவே ஆடலும் பாடலும் இருந்தால் மனச்சோர்வு வரவே வராது என்பது நம் மண்ணின் சிறப்பு. அது உழைப்பாளர்களின் கலாச்சாரம். வாழ்த்துக்கள்.