இசுலாமியர்கள் செய்த நெகிழ வைக்கும் செயல்!

கூடலூர் அருகே இஸ்லாமியர்கள் சேர்ந்து 800 குடும்பங்களைச் சார்ந்த 400 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடலூரை அடுத்துள்ள பாடந்துரை கிராமத்தில் இந்த மனிதநேய சம்பவம் நடந்து உள்ளது. அங்கே மார்க்கஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்வது, வயதானவர்களுக்கு நிதி உதவி அளிப்பது, கல்வி பயில முடியாமல் இருக்கும் நபர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வது போன்ற உதவிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

அதேபோல் திருமண வயதில் ஆண்கள், பெண்கள் இருக்கும் வீடுகளில் அவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வது போன்ற பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு மதத்திற்கு மட்டுமின்றி எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள்.

அதாவது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இவர்கள் உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில்தான் கூடலூர் அருகே இவர்கள் சேர்ந்து 400 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கூடலூரை அடுத்துள்ள பாடந்துரை கிராமத்தில் இவர்கள் இந்த சமூக திருமணத்தை நடத்தி வைத்து உள்ளனர். 800 குடும்பங்களை சேர்ந்த 400 ஜோடிகளுக்கு 4 இலட்சம் செலவில், 5 சவரன் நகை போட்டு திருமணம் நடத்தி வைத்து உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில மக்களுக்கும் இங்கே திருமணம் நடந்து உள்ளது

ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த மக்களுக்கும் இவர்கள் திருமணம் செய்து வைத்து உள்ளனர். வசதி குறைந்த பின்னணி கொண்ட மக்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே வீட்டில் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான செலவை இவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். இவர்கள் வந்து போக போக்குவரத்து செலவையும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ தம்பதிகள் என்று மத வேறுபாடு இன்றி இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து உள்ளனர்.

இலவச திருமணம் என்பதற்காக இவர்களுக்கு சாதாரணமாக, எளிமையாக எல்லாம் திருமணம் நடத்தவில்லை. நல்ல விருந்து போட்டு தடல்புடலாகவே திருமணம் செய்து உள்ளனர். இவர்களுக்கு தலா ஐந்து சவரன் நகை போட்டுள்ளனர். இது போக 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீதனங்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பல வீடுகளில் நடக்கும் திருமணத்தை விட பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 37 இந்து ஜோடிகளுக்கு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி பூஜைகள் செய்து திருமணம் நடத்தி வைத்து உள்ளனர்/ 3 ஜோடிகளுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். மீதமுள்ள 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு விழா பந்தலில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தனர். இந்து ஜோடிகளுக்கு சைவ விருந்தும், மற்ற இரண்டு மத ஜோடிகளுக்கு அசைவ விருந்தும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இராகவேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *