HR உன்ன கூப்பிடுறார்…(11)

அலறவிடும் Appraisal

அப்ரைசல் எனும் வார்தையைக் கேட்டாலே, என்னமோ என்ன மாயமோ நம்மள அறியாமலே ஒருவித பயம் வருது என்று, நிறுவனங்களில் வேலைபார்க்கக்கூடிய பலர் சொல்லக் கேள்வி பட்டிருப்போம், நானும் அந்த பயத்தை கடந்துதான் வந்துள்ளேன், அப்ரைசல் என்பது பயங்கொள்ளக்கூடிய விசயமா? அல்லது பயங்கொள்ளக்கூடிய விஷமா? என்னவென்று பார்க்க ஆசையா? வாங்க மேற்கொண்டு அலசுவோம். அதற்கு முன் அதைப்பற்றி வேலைபார்க்கும் இடங்களில் உலவக்கூடிய பொதுவான வசைமொழிகளைப்பற்றி பார்ப்பது நம் மனதை இலகுவாக்கும். அது அப்ரைசல் இல்ல மச்சி ஆப்புரைசல்னு சொல்றதுதான் சரியா இருக்கும், இவனுக்கு எதாவது செய்யணும் இவன ஏதாச்சும் செய்யணும். வச்சு செய்றதுக்கு வாய்ப்பான நேரம் அப்ரைசல் தான் மாப்ள. எப்போதும் சொல்றத கொஞ்சம் பில்டப் கொடுத்து சொல்லப்போறானுக, இதுக்கு எதுக்கு இந்த அளப்பறையாம். இதுபோன்ற இன்னும் ஏகப்பட்டதை நாம் காதுபட கேட்டிட்டுப்போம், நாமேகூட சொல்லியிருப்போம், இப்போதைக்கு இது போதும் என நிறுத்திக்கொள்கிறேன்.

Performance Management: The blessing, the curse and the hidden nightmare

அப்ரைசல் பற்றிய பொதுவான எண்ணம் ஏன் இப்படி எதிர்மறையாகவே இருக்கிறது எனும் எண்ண ஓட்டம் நமக்குள் ஓடலாம், இன்னும் அதைப்பற்றிய சரியான புரிதல் இல்லையென்றுதான் கூறவேண்டும். அதற்கு முக்கியக் காரணம் மதிப்பீடுகளைத் தாண்டி ஒப்பீடு அதிகமாகும்போது இதுபோன்ற வசைமொழிகள் இடம்பெறுவது இயல்புதான். மனிதவளத்துறையில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் என் நண்பர்கள் இத்தொடரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு “நம்மைப்பற்றிய ஒப்பீடு வேண்டாம், ஆனால் மதிப்பீடு வேண்டும்”  என்று நான் எழுதியதைப் பார்த்து மிகவும் பாராட்டினர், இந்த பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஆதலால் பாராட்டாமல் இருந்திருந்தாலும் எனக்கு அது ஒன்றும் பாதிப்பாக இருந்திருக்காது, அதே வேளையில் நான் இவரிவர் இப்படி நம்மை பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்போடு இருந்து அது கிடைக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும், எதிர்பார்ப்போடு எதையும் அணுகும் போக்கு சரியானதல்ல, நமக்கும் ஏற்றதல்ல. ஆதலால் அப்ரைசல் நேரத்தில், எதையும் எதிர்பார்க்காமல் அதே நேரத்தில் நம் கருத்தை/எண்ணத்தை எடுத்த வைக்கக்கிடைத்த நல்வாய்ப்பு எனக் கருதி செயல்படுவதுதான் சிறந்த அணுகுமுறையாகும். 

வாழ்க்கையில் நம்மை எப்போதும் உறுத்தும் இரு விசயங்கள், ஒன்று “செய்திருக்கலாம்” இன்னொன்று “செய்யாமல் இருந்திருக்கலாம்”,

1,432 Performance Appraisal Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock

இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்துகொண்டாலே போதும், அப்ரைசல் பற்றி போதுமான புரிதல் உங்களுக்கு வந்துவிட்டது என சொல்லிவிடலாம்.

நமக்கான மாறுதல் என்பது நம்மிடம்தான் இருக்கிறது, மறந்து போவதும், கடந்து போவதும். இதில் எப்பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கான ஏற்றம் அமையும். அப்ரைசல் நேரத்தில் HRரின் தலைதான் அதிகமாக உருட்டப்படும், நான் உனக்கு என்னென்ன செய்றேனு சொன்னேனோ அதெல்லாம் விரிவா HRகிட்ட தகவல் கொடுத்துட்டேன், இனிமே அவங்க கையிலதான். நான் என்னப்பா பண்றது, HR கடைசி நேரத்துல உள்ள புகுந்து உனக்கு வரவேண்டிய சம்பள உயர்வையும் (Increment) மற்றும் பதவி உயர்வையும் (Promotion) நிறுத்திட்டாரு, நான் என்னபண்ண முடியும் நீயே சொல்லு என எளிமையாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள், கொளுத்திப்போட்ட தீயை அணைப்பதற்குள் HRக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

Why Your Business Should Have A Promotion Policy - Insperity

இப்படி இந்த இக்கட்டான நேரத்தில், வேலைபார்ப்பவரையும் பகைக்காமல், ஒவ்வொரு துறைசார்ந்த உயர்பொறுப்பில் இருப்பவரையும் ஒதுக்காமல் சமநிலைப்படுத்தி செயல்படுவது என்பது HRக்களுக்கான சவால் நிறைந்த செயல். எல்லா HRகளும் இதேபோல சவாலை சமாளித்து இருப்பார்களா எனக்கேட்டால், இல்லையென்றே கூறலாம். பின்ன எப்படித்தான் எனும் ஆதங்கமான கேள்வி நமக்குள்ளே ஓடுதா? ஓடட்டும், இதற்கான பதிலும், அப்ரைசல் ஏன் எதற்கு எனும் கேள்விக்கான பதிலும் மற்றும் புரிதலை உணர்த்தும் கருத்துளும் அடுத்த வாரத்தில். 

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. Good anna

  2. MOHAMMED MANSOOR ILAHI says:

    Good topic which is need of the hour.