ஒன்றிய அரசு என்றே அழைப்போம் ; உறுதி காட்டும் திமுக!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக முழு வதிலுமாக மத்திய பாஜக அரசின் ஏவல் ஆளாகவே தமிழகத்தில் ஆட்சியை செலுத்தியது எனவும், தங்களது ஆட்சி அதிகாரத்தினை காப்பாற்றிக்கொள்வதற்காக இவர்கள் முற்று முழுதிலுமாக மத்திய அரசின் கைப்பவையாகவே மாறி மாநில உரிமைகளை தாரை வார்த்து வருகிறார்கள் எனவும் தொடர்ச்சியான விமர்சனங்களை திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த தமிழக அதிமுக அரசின் மீதும் – மத்திய பாஜக அரசின் மீதும் வைத்து வந்தார்.
தற்போது தமிழக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ள நிலையில், மத்திய அரசின் மீதான தனது விமர்சனங்களை மேலும் கூர்மைப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நாடு, ஒரே மொழி என்பன போன்ற மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார போக்குகளை எதிர்த்திடும் வகையிலும், நாடு முழுமைக்குமான மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வினை நடத்துவதனை எதிர்த்திடும் வகையிலும் தமது அரசின் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஸ்டாலின், நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து கருத்துக்கேட்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலான ஆணையம் ஒன்றினை அமைத்துள்ளார்.
அதேபோல், மாநிலங்களின் அதிகாரத்தினை குறைத்து மத்தியில் எல்லாவித அதிகாரங்களையும் குவித்துக்கொள்வது போன்ற மத்திய அரசின் அணுகுமுறையை எதிர்ப்பது போலவும், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் ‘எங்கள் உரிமை’ என்பதனை சுட்டிக்காட்டும் வகையிலும், தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் மத்திய அரசு என்ற சொல்லாடலை பயன்படுத்தாமல், ஒன்றிய அரசு என்றே பயன்படுத்தி வருகிறது.
அவ்வாறு பயன்படுத்துவது எங்கள் அரசியல் – சட்ட ரீதியிலான உரிமையும் கூட என்பதனையும் தமிழக அரசு சுட்டிக்காட்டி வருகிற நிலையில், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ஒன்றிய அரசு என்ற தமிழக அரசின் வார்த்தை பிரயோகத்தினை எதிர்க்கின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தினை எட்டியுள்ளது. தமிழக அரசின் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகம் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது ; எனவே தமிழக அரசும், அரசின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், இன்ன பிறரும் ஒன்றிய அரசு என்று மத்திய அரசை அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென, மனுதாரர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கோரியுள்ளதைப்போல் தமிழக அரசின் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தினை தங்களால் தடை செய்திட முடியாதெனவும், அது அவர்களது தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறானான மனுக்களின் மூலம் மக்களுக்கு மனுதாரர் என்னவிதமான செய்திகளை சொல்ல விரும்புகிறார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆக, இப்போது ஓய்ந்துதீரப்போவதில்லை ‘ஒன்றிய அரசு’ பிரச்சனை.