ஐஸ்கிரீம் விற்ற அதேத் தெருவில் சஸ் இன்ஸ்பெக்டர்… அசத்தும் ஆனி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆனிசிவா. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அந்த காதல் வாழ்க்கை இரண்டு வருடம் கூட நீடிக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஆனிசிவாவை பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த ஆனி, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதனால், வர்கலாவில் உணவு டெலிவரி செய்து, எலுமிச்சம் பழங்களை விற்று, திருவிழாக்களில் ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை விற்று கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு கல்வியையும் விடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.
தனது முயற்சியின் காரணமாக, போலீஸ் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று தான் ஐஸ்கிரீம் விற்ற அதேத் தெருவில் தற்போது, சப் – இன்ஸ்பெக்டராக கெத்தாக வலம் வருகிறார்.
இது குறித்து, ஆனிசிவா தனது பேஸ்புக் பக்கத்தில், “10 ஆண்டுகளுக்கு முன்பு வர்கல சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சபழங்களையும், ஐஸ்கிரீம் விற்றேன். நான் இன்று போலீசாக அதே இடத்திற்கு செல்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனை தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த கேரள காவல்துறை, “இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களை உறுதியுடன் வென்ற எங்கள் சாகாவின் கதை” என பதிவிட்டுள்ளனர்.
கணவரும், பெற்றோரும் கைவிட்ட போதும், தனி ஆளாக விடாமல் 10 ஆண்டுகளாக உழைத்து முன்னேறியிருக்கும் ஆனிசிவாவின் வாழ்க்கை அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியாத இருக்கிறது.