கருவாடு மீனாகாது…முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல் அலை கொரோனா தொற்றுக்காலத்தில், அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், தற்போது திமுக ஆட்சியில் எடுக்கப்படவில்லை. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதாக தெரிகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேசிய பேரிடர் கால சட்டத்தின்படி, கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார்.
சசிகலா குறித்து கேள்வி எழுப்பியபோது, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கும், அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது என்று அவர் கூறினார்.